பாஸ்கா காலம் - நான்காம் ஞாயிறு
கிம் ஜாங் மட்டுமல்ல, இன்று உலகில் பல ஆட்சியாளர்கள், தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். நமது மாநிலத்தில், நமது நாட்டில் என இப்படிப்பட்ட சர்வதிகரிகள் பலரை நாமும் வரலாற்றில் படித்திருக்கிறோம். நாம் வாழும் இன்றைய சூழலில் நேரடியாக அனுபவித்திருக்கிறோம். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் மக்களை அதிகாரத்தின் பெயரால் சீரழிக்கும் நிலைதான் இன்றைய எதார்த்தம். இப்படித் தன் சுயநலத்திற்காக மக்களை வாட்டிவதைக்கும் தலைவர்களுக்கு மத்தியில், தள் மக்களுக்காகத் தன்உயிரையும் கொடுக்கத் துணிந்த ஒரு தலைவராக, அன்பான ஆயராக ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார். இதைத்தான் திருஅவை நல்லாயன் ஞாயிறாக இன்று சிறப்பிக்கின்றது.
விவிலியம் முழுவதும் கடவுளுக்குப் பல்வேறு உருவகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகமிக முக்கியமானது ஆண்டவரை ஆயராகப் பார்ப்பது. அடிப்படையில் ஆடுமேய்க்கும் நாடோடிச் சமூகமாக இருந்த இஸ்ரயேல் சமூகம் தங்கள் கடவுளையும் தங்களைப் போன்ற ஒரு ஆயராகப் பார்த்தது. ‘ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை’ (தி.பா.23:1) என மகிழ்ந்து பாடியது. ‘மோசே, ஆரோன் ஆகிய உம்ஊழியர்களைக் கொண்டு மந்தையென மக்களை ஆள்கிறீர்’ (திபா.77:2) என்றே தங்கள் வரலாறையும் அவர்கள் எழுதினார்கள். ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஆயரான தாவீதைத் தான் தங்களின் தலைசிறந்த அரசராகவும் அச்சமூகம் பார்த்தது. ‘உன் மக்களை ஆயரென ஆள்பவர்’ (மீக்.5:2) என்றே வரவிருக்கும் மெசியாவையும் அடையாளப்படுத்தியது.
இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் அனுபவத்தில் பார்த்தாலும் அவர்கள் கடவுளைத் தங்கள் ஆயராக அனுபவித்தார்கள் என்பதே உண்மை. இரவில் நெருப்புத்தூணாகவும், பகலில் மேகத்தூணாகவும் அவர்களை நடத்திவந்த ஆயன். பாலும் தேனும் பொழியும் தலைசிறந்த மேய்ச்சல் நிலமான கானான் நோக்கி அவர்களை நடத்திச் சென்ற ஆயன். பசுமையான புல்வெளிகளில் அவர்களை நடத்திச் செல்கின்ற ஆயன். இதுவே அவர்கள் கடவுளுக்கென்று வைத்திருந்த அடையாளம்.
இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் அனைவருமே கடவுளைப்போல நல்ல ஆயர்களாக இருக்க வேண்டும் என்றே கடவுளும் எதிர்பார்த்தார். அப்படி அவர்கள் நல்ல ஆயர்களாக இல்லாதபோது அவர்களைக் குறித்து கோபப்பட்டார். புதிய ஆயர்களைத் தருவதாக வாக்களித்தார். ஒருகட்டத்தில் தானே அவர்களது ஆயராக வரப்போவதாகவும் கூறினார் (எசே.34). இந்தப் பின்புலத்தில்தான் இயேசுவும் தன்னை நல்ல ஆயனாக வெளிப்படுத்துகிறார்.
கடவுள் நல்ல ஆயர் என்றால் அவரது மந்தையும் நல்ல மந்தையாக இருக்க வேண்டும். அவரது மேய்ச்சலின் ஆடுகள் நல்ல ஆடுகளாக இருக்க வேண்டும். இன்று நம்முன் வைக்கப்படும் சிந்தனை இதுதான். நம் ஆண்டவர் நல்ல ஆயன். ஆனால் நாம் நல்ல ஆடுகளாக இருக்கிறோமா? நல்ல ஆடுகளாக இருக்க வேண்டுமென்றால் இரண்டு பண்புகள் நம்மிடம் இருக்க வேண்டும் என இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவுபடுத்துகிறார்: (1) என் ஆடுகள் என் குரலுக்கு செவிசாய்க்கும். (2) என் ஆடுகள் என்னைப் பின்தொடரும். நாம் எந்த அளவுக்குக் இயேசுவுக்குச் செவிசாய்க்கிறோம்? எந்த அளவுக்கு இயேசுவைப் பின்தொடர்கிறோம்?
யாருக்கும் செவிசாய்க்காத, யாருக்கும் கீழ்ப்படியாத, யார்சொல்லையும் கேட்காத ஒரு சமுதாயமாக நாம் மாறி பலகாலம் ஆகிவிட்டது. பெற்றோருக்குச் செவிசாய்க்காத பிள்ளைகள், ஆசிரியர்களுக்குச் செவிசாய்க்காத மாணவர்கள், மக்களுக்குச் செவிசாய்க்காத அரசு, சட்டங்களுக்கு செவிசாய்க்காத மக்கள்.... இப்படி நீண்டு கொண்டே போகிறது இன்றைய செவிசாய்க்காத சமுதாயத்தின் நிலை. இத்தகைய சமுதாயத்தில் வாழும் நாம், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைகளுக்கு நாம் செவிசாய்க்கிறோமா? கடவுளுக்குச் செவிசாய்க்காத ஆடுகள் வழிதவறி அலைவதைப்போல நாமும் இருந்துவிடக்கூடாது என்பதுதான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு நமக்குத் தரும் அறிவுரை. ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாக இருப்பவருக்குச் செவிசாயுங்கள் என்ற பேதுருவின் அறிவுரையை நாம் கேட்போம்.
யாரைப் பின்செல்வது என்பதிலும் இன்றைய சமுதாயத்தில் ஏராளமான குழப்பங்கள். ஒருபக்கம் திரைப்பட நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் தான் கதாநாயகர்களாக எண்ணி அவர்களைப் பின்செல்வதே இன்றைய இளைய சமுதாயம். மறுபக்கம் ஏமாற்றும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக எண்ணி அவர்களைப் பின்தொடரும் மனிதர்கள். இன்னொரு புறம் தவறாக வழிநடத்தும் மனிதர்களையே தலைசிறந்த வழிகாட்டிகளாக எண்ணி அவர்களையே தங்கள் முன்மாதிரிகளாக நினைத்து பின்செல்கின்ற கூட்டம். இப்படிப்பட்ட சூழலில் கடவுளைப் பின்செல்லும் மனிதர்களாக வாழ நம்மால் முடிகிறதா? சரியான வழிகாட்டிகளை குற்றம்சுமத்திக் கொல்வதையும், நெறிகெட்ட தவறான வழிகாட்டிகளிடம் தங்களை அடிமைப்படுத்திக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்த யூதர்களிடம் பேதுரு இன்றைய முதல் வாசகத்தில் சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்: ‘நெறிகெட்ட தலைமுறையிடமிருந்து, தவறான வழிகாட்டிகளிடமிருந்து நம்மையே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’.
நல்ல ஆயன் ஆண்டவர் என்று நாம் பாராட்டுகிறோம். நல்ல ஆடுகள் என்மக்கள் என்று ஆண்டவர் நம்மைப் பாராட்ட வேண்டுமென்றால் நாம் நம் ஆயருக்கு செவிசாய்ப்போம். நம் ஆயரைப் பின்தொடர்வோம்.
Comments
Post a Comment