திருச்சிலுவைப் பாதை
திருச்சிலுவைப் பாதை
முன்னுரை
சிலுவைப் பாதை. இறுகிப் போன இதயங்களையும் இளகிடச் செய்யும் இறைமகன் இயேசுவின் பாதை. அவமானமும், அவலமும் நிறைந்த வேதனையின் பாதை. துன்பங்களும், துயரங்களும் நிறைந்த பாடுகளின் பாதை. நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலியாக்க முன்வந்த இயேசு அனுபவித்த சொல்லொண்ணா பாடுகள் தான் இந்த சிலுவைப் பாதை. ஏதோ, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்து விட்ட ஒரு சாதாரணச் சம்பவம் அல்ல இது. இன்றும் நாம் வாழும் இவ்வுலகிலும் ஒவ்வொரு நாளும் கல்வாரிப் பயணம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அன்று இயேசு வேதனைகளை அனுபவித்தார். இன்று நம்மோடு வாழும் நல்லவர்கள் வேதனைகளை அனுபவிக்கின்றனர். அன்று இயேசுவின் துயரத்திற்குக் காரணம், பரிசேயர் கூட்டம். இன்று நல்லோர் படும் துயரத்திற்குக் காரணம், நம் சுயநல எண்ணம். ஆம், இக்கல்வாரிப் பயணத்தின் ஒவ்வொரு நிலையும் நம்மைக் கண்ணீர் விட்டு அழச் செய்வதோடு நின்று விடுவதில்லை. நம் உள்ளத்தையும், உள்ளுணர்வுகளையும் தொடுகின்றது. தூண்டுகின்றது. நம்மோடு வாழும் அண்டை அயலாரின் துன்பங்களைத் துடைத்தெறிய நம்மை அழைக்கின்றது. மனிதர்கள் யாவரும் இறைவனின் சாயலே. மனிதர்கள் படும் துன்பங்கள் யாவும் இயேசுவுக்கும் துன்பத்தைத் தரும். எனவே, அயலாரின் துன்பத்தைத் துடைப்பது தான் ஆண்டவனுக்குச் செய்யும் மகத்தான தொண்டு. இவற்றை மனத்தில் நிறுத்தியவாறே, இயேசுவின் பாடுகளைத் தியானிப்போம். நொறுங்கிய நெஞ்சத்தோடு, குத்துண்ட உள்ளத்தோடு, நம் மீட்பர் பயணித்த அதே பாதையில் நாமும் பயணிப்போம்.
1. படைத்தவரைப் படைப்புகள் தீர்ப்பிடுகின்றன
தியானத்தில்…
மனுக்குலத்தின் பாவக்கறைகளைத் தம் மரணத்தின் மூலம் துடைக்க வந்த நம் ஆண்டவர், தமது துயரம் மிகுந்த பாடுகளின் பாதையில் முதல் அடியை எடுத்து வைக்கின்றார். கெத்சமனித் தோட்டத்தில் கயவர்களால் கைது செய்யப்பட்டவர், இதோ, தான் படைத்த மனிதனிடமே தண்டனை பெறத் தயாராகின்றார். இது ஒரு வித்தியாசமான நீதி மன்றம்! ஆம், குற்றவாளிகள் கூடி நின்று குற்றமற்றவருக்குத் தண்டனை வழங்கும் வித்தியாசமான நீதிமன்றம். இங்கு பாவிகள் அனைவரும் அரியணையில் அமர்ந்திருக்க, நீதிபதியோ கூண்டில் நிற்கின்றார். இங்கு படைப்புப் பொருட்கள் ஒன்றிணைந்து படைத்தவரைப் பழிதீர்க்கக் காத்திருக்கின்றன. “வாருங்கள்! நானே நல்ல ஆயன்! உங்களை மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச் செல்வேன்” என்று முழங்கியவரைக் கற்களும் முட்களும் நிறைந்த கரடுமுரடான பாதையில் நடத்திச் செல்ல இங்கு ஆடுகள் அனைத்தும் ஆர்ப்பரிக்கின்றன.
இந்த அடிவருடிகள் கூட்டத்தின் ஆரவார ஒலிக்கு முன், ஆண்டவர் இயேசு அமைதியாகின்றார். சர்வ வல்லமை படைத்திருந்தும் சாமானியர்களின் சட்டத்திற்கு முன் சரண் அடைகின்றார். “நீ அரசனா?” என்ற அறியாமைக் கேள்விக்கும் சரி “உண்மையா, அது என்ன? என்ற நையாண்டிக் கேள்விக்கும் சரி, அவர் பதிலாகக் கொடுத்தது சலனமில்லா மௌனம் மட்டுமே. மாசற்ற செம்மறி இவர் என்பதை மனமார அறிந்தும் கூட, தன் மனசாட்சியை மறைத்து விட்டு பொய்த் தீர்ப்பு எழுதுகிறான், கொடியவன் பிலாத்து. தன்னலம் மிகுந்த தலைமைக் குருக்களோடும், பாவத்தில் உழலும் பரிசேயரோடும் இணைந்து ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழைக்குத் தொடக்கவுரை எழுதுகிறான். ‘சீசருக்கு நண்பன்’ என்னும் சிற்றின்ப நாட்டத்தில் மாசற்ற செம்மறிக்கு மரணத் தீர்வைத் துணிகின்றான். கைகளைக் கழுவிக் கொண்டே தீர்ப்பிடுகிறான், இத்துடன் மனுக்குலத்தின் பாவமும் கழுவப்பட இருக்கின்றது என்பதை அறியாமலேயே.
சிந்தனையில்…
எத்தனை முறை நாம் வாழ்வதற்காக பிறரது வாழ்வைக் கெடுத்திருப்போம்? நமது சுயநலத்திற்காகப் பிறரைச் சிக்கல்களில் மாட்டி விட்டிருப்போம்? சரிவர யோசிக்காமலும், ஆராயாமலும் பிறர்மீது இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் சுமத்தியிருப்போம்? எந்த விதத்தில் நாம் பிலாத்துவை விட நல்லவர்கள்?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! என் சுயநலத்திற்காக, என் அண்டை அயலாரைத் துன்புறுத்தாமல் வாழும் நல்ல மனதை எனக்குத் தாரும். ஆமென்.
2. மலரின் தோள்களில் மரம் ஏற்றப்படுகின்றது
தியானத்தில்…
பாவ மாசணுகா பரிசுத்தராக வாழ்ந்த இயேசு, பாவங்களை, அதுவும் பிறரின் பாவங்களைச் சுமக்கத் தயாராகின்றார். யாராலும் பருக முடியாத துன்பக் கிண்ணத்தைப் பருகத் தம்மையே ஆயத்தம் செய்கின்றார். தமது மௌனத்தின் பரிசாக, மரணதண்டனை பெற்றவர், தமது கொலைக் கருவியைச் சுமந்து செல்லத் தாராள மனத்தோடு முன் வருகின்றார். 33 வயதில் 39 கசையடிகளைத் தம் உடலில் ஏற்கின்றார். ஏளனம், இகழ்ச்சி, எச்சில், கசையடி என அனைத்தையுமே அமைதியுடன் தாங்கிக் கொள்கிறார், இயேசு. முள்சாட்டை முத்தமிட்;டதும், இயேசுவின் உடலில் குருதி கொப்பளிக்கின்றது. உடல் முழுவதும் இரத்தத்தால் குளித்ததும், பாவிகளின் கவனம் அவர் தலையை நோக்கித் திரும்புகின்றது. சீரிய குணங்கள் கொண்ட இயேசுவுக்கு கூரிய முட்களைக் கொண்டு மணிமுடி சூட்டப்படுகிறது. அவரது தலையிலிருந்து அருவியெனப் பாய்கிறது, இரத்த வெள்ளம். நெற்றியை நிறைத்து, கண்களை மறைத்து, இயேசுவின் முகம் முழுவதுமே இரத்த அபிஷேகம்.
இத்தனை கொடுமைகளுக்கும் பிறகு, இன்னொரு கொடுமை காத்திருக்கின்றது. அதுதான் பாரச்சிலுவை. பாவிகளோடு மட்டுமே இதுவரை பவனி வந்த சிலுவை, முதன் முறையாக பரிசுத்தர் ஒருவருக்காகக் காத்திருக்கிறது. அவமானத்தின் அடையாளமாக, கொடுமையின் சின்னமாக இதுவரை இருந்த சிலுவை, இந்தக் கணம் முதல், ஆறுதலின் அடையாளமாக, மீட்பின் சின்னமாக மாறப் போகிறது. வலியும் வேதனையும் மிகுந்ததால், வலிமையற்றுப்போன இயேசுவின் தோள்களில் பாரச் சிலுவையைத் தூக்கி வைக்கிறது, பாவிகளின் கூட்டம். உடலில் உறுதி இல்லை என்றாலும், உள்ளத்தில் உறுதியோடு சிலுவையைச் சுமந்து கொண்டு, கல்வாரி நோக்கிப் பயணிக்கின்றன, இயேசுவின் கால்கள்.
சிந்தனையில்…
இன்று நம்மில் எத்தனைபேர் குறுகிய லாபத்திற்காக தாங்க முடியாத சுமைகளை பிறர்மீது சுமத்திக்கொண்டு இருக்கிறோம்? நம்மை விட எளியவரை வாட்டி வதைத்தும், பிறரை ஏளனம் செய்தும் நாம் எத்தனை முறை மகிழ்ந்திருப்போம்? நாம் செய்யும் இதுபோன்ற தவறுகள் எல்லாம் இயேசுவின் மீது சுமத்தும் சிலுவைகள் தானே?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! எனது சுயநலத்திற்காக, என்னை விட எளியவர்களை வாட்டி வதைக்காமல் வாழும் நல்ல உள்ளத்தைத் தாரும். ஆமென்.
3. மல்லிகைப் பூவொன்று மண்ணில் வீழ்கிறது
தியானத்தில்…
மனுக்குலத்தின் மீட்பைத் தம் மரணத்தின் மூலம் பெற்றுத்தர இறைமகன் இயேசு பாரச்சிலுவையோடு நடந்து கொண்டு இருக்கின்றார். தம் மண்ணக வாழ்வில் அவர் மேற்கொள்ளும் இறுதிப் பயணம் இதுதான். எத்தனையோ நகர்களுக்கு நடந்து சென்று போதித்தவர், இன்று மரணத்தின் விளிம்பில் கல்வாரி மலை நோக்கி நடக்கின்றார். எத்தனையோ மலைகளுக்கு ஏறிச் சென்று செபித்தவர், இன்று மண்டை ஓடு மலை நோக்கி மவுனமாக நடக்கிறார். தலையிலே முள்முடியின் தாக்குதல், உடலிலே கசையடியின் காயம், இவற்றோடு தோளிலே சிலுவையின் பாரமும் இணைந்து, இறைமகனின் பாதங்களை இடற வைக்கின்றன. தள்ளாடித் தடுமாறி நடந்து வந்த இயேசு, இனியும் நடக்கத் தெம்பின்றி மண்ணில் சாய்கின்றார். சந்தன மாலை சகதியில் சாய்ந்தது போல, மானிட மகனின் உடல் மண்ணில் விழுகின்றது. தன் துன்பங்களின் மத்தியிலும் தடம் பதித்து வந்தவர், இன்று வேதனையின் உச்சத்தில் மண்ணில் முகம் பதிக்கிறார்.
எல்லாம் வல்லவர், வலியவர்க்கெல்லாம் வலியவர், மனித குலத்தின் பாவங்களால் மரச் சிலுவைக்கு முன் மண்டியிடுகின்றார். ஒரு வாரத்திற்கு முன்பு தான், அவரைச் சுமந்து வந்த கழுதையின் கால்கூட மண்ணில் படக்கூடாது என போர்வைகளையும், மேலாடைகளையும் விரித்து, அவரை வரவேற்றது, மக்கள் கூட்டம். ஆனால் இப்போது குற்றுயிரும் குலையுயிருமாய் அவர் மண்ணில் விழுந்தது கண்டு மனசாட்சியே இல்லாமல் மகிழ்கிறது, மாக்கள் கூட்டம். தங்கள் பாவத்திற்கும் சேர்த்துதான் அவர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை உணராமல் இரக்கமில்லா இதயத்தோடு, அவரைச் சாட்டையால் அடிக்கின்றனர், படைவீரர்கள். மண்ணில் விழுந்த இயேசுவுக்கோ எழ முடியாத அளவிற்கு வேதனை. மரச்சிலுவையின் பாரத்தால் அவரது தினவெடுத்த தோள்களும் மரத்துப் போய் விடுகின்றன. தன் இலட்சியப் பயணத்தில் இடையூறு ஏற்படக் கூடாது என்ற கொள்கை உணர்வுடன், வேதனையை வென்று எழுகிறார் இயேசு, தொடர்ந்து நடக்க.
சிந்தனையில்…
இன்று நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக எத்தனை முறை பிறரை விழச் செய்கிறோம்? நம்மோடு வாழும் ஏழை, எளியவரை வீழ்த்தி, அதில் வெற்றி காண எத்தனை முறை துடித்திருப்போம்? பிறரது வீழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காணும் நமக்கும், இந்தப் படைவீரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே!பிறரது வீழ்ச்சியில் வாழ வேண்டும் என நினைக்காமல், அவர்களும் வாழ வேண்டும் என்று உழைக்கும் நல் மனதை எனக்குத் தாரும். ஆமென்.
4. உறையும் வாளும் ஒன்றையொன்று பார்க்கின்றன
தியானத்தில்…
அளவிட முடியாத வேதனையோடு, கல்வாரி மலை நோக்கிக் கால் கடுக்க நடக்கிறார். நம் ஆண்டவர் இயேசு, படைவீரர்களின் மிரட்டல்கள், மக்கள் கூட்டத்தின் இகழ்ச்சிகள் எதையும் பொருட்படுத்தாது, கொண்ட கொள்கையில், குலையாத உறுதியுடன் முன்னோக்கி நடக்கிறார் இயேசு. தன் தந்தையின் திருவுளத்தைத் தயங்காமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது தான் அவர் தம் தாய், அவரை சந்திக்க வருகிறார். தாயும் சேயும் சந்தித்த அத் தருணத்தில் சொல்லொண்ணா வேதனையை தன் உள்ளத்தில் உணர்கிறார், அந்த உத்தமத் தாய். தள்ளாடிக் கொண்டிருக்கும் மகனை ஆறுதல்படுத்த வந்தவர், இப்போது தனக்கே ஆறுதலின்றி தடுமாறுகிறார். சர்வ வல்லவரைப் பெற்றடுத்தாலும் அவரும் சராசரிப் பெண் தானே! தாயின் மனம் படும் பாடு தனயனுக்கு புரிகிறது. “ஆகட்டும்”; என்ற ஒற்றை வார்த்தையால், இந்த அவனிக்கு மீட்பைக் கொண்டுவரும் கருவியாக மாறியவள், இன்று ஆன்மாவுக்குள்ளே அழுது கொண்டிருப்பது அவரது கண்களுக்கு தெளிவாகவே தெரிகிறது. இறைவன் குரலுக்கு இசைந்த நொடி முதல், தன் இறுதிப் பயணத்தில் இணைந்துள்ள இக்கனம் வரை அவர் பட்ட துன்பங்களையும், செய்த தியாகங்களையும் எண்ணிப் பார்க்கிறார் இரண்டு இதயங்களும் இணைகின்றன.
ஆனால், அன்னை வந்தது மகனுக்கு ஆறுதல் சொல்ல அல்ல. கல்வாரிப் பயணத்தில் கலந்துகொண்ட மகனைப் பார்த்து கண்ணீர் வடிக்கவும் அல்ல. பேதுருவைப் போல, “வேண்டாம் ஆண்டவரே, உமக்கிந்த பாடுகள்” என்று வேதனைப் பட அல்ல. மாறாக, தொடர்ந்து முன்னேறும் படி தொடர்ந்து உற்சாகப்படுத்த, “உன் அண்ணன்களைப் போலவே, ஆண்டவருக்காக உயிரை விடு” என்று தன் இளைய மகனைத் தூண்டிய மக்கபேயர் காலத்துத் தாயைப் போல, கடவுளின் விருப்பத்தை மட்டுமே மனதில் முன் நிறுத்தி, “கல்வாரியை நோக்கிச் செல்” என்று தம் மகனை உற்சாகப்படுத்துகிறார் அன்னை மரியாள். அழுது அரற்றுவாள் என்று எதிர்பார்த்திருந்த படைவீரர்களுக்கும், பரிசேயக் கூட்டத்திற்கும் இந்த தாயின் வீர மொழிகள் சற்று ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும். ஆனால், இயேசுவுக்கோ, தன் அன்னையைப் பற்றி நன்றாகவே தெரியும். முப்பது ஆண்டுகள் தாயின் துணையோடு தந்தையின் திருவுளப்படி நடந்தவர் ஆயிற்றே. அன்னை தந்திட்ட அசாத்திய துணிச்சலால், புதிய உத்வேகத்தோடு தொடர்ந்து நடைபோடுகிறார், இயேசு.
சிந்தனையில்…
கொள்கையில் உறுதியுடன் உழைக்கும் நல்லோரை எத்தனை முறை காயப்படுத்தியிருப்போம்? முன்னேறிச் செல்வோரை அன்னை மரியாளைப் போல் தட்டிக்கொடுக்காமல், எத்தனை முறை அவர்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டிருப்போம்? கல்மனம் கொண்ட நமக்கு மரியாளின் பிள்ளைகள் எனச் சொல்லிக்கொள்ள எப்படி மனம் வருகிறது?
செபத்தில்… எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! முன்னேறிச் செல்வோருக்கு உதவியாக இல்லாவிட்டாலும், உபத்திரவமாக இல்லாமல் இருக்கும் நல் மனதை எனக்குத் தாரும். ஆமென்.
5. ஆலமரத்தை அருகம்புல் தாங்குகிறது
தியானத்தில்…
கண்கள் படபடக்க, கால்கள் கிடுகிடுக்க இயேசுவின் கல்வாரிப் பயணம் தொடர்ந்து நடக்கிறது. ஒளியிழந்த விழிகளோடும், வலுவிழந்த கால்களோடும், பலமிழந்த கைகளோடும் முன்னேறிக் கொண்டிருக்கிறார் நம் மீட்பர். தாங்க முடியாத சிலுவைப் பளு அவரை நடக்க விடாமல் தடுக்கிறது. அவரது முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டை போடுகிறது. படைவீரர்கள் தொடர்ந்து அடித்தாலும் நகர மறுக்கின்றன, இயேசுவின் கால்கள். படைவீரர்களைப் பயம் வாட்டி வதைக்கிறது. போகும் வழியிலேயே இயேசுவின் உயிர் போய் விட்டால், பிலாத்துவின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் தங்கள் வேலை போய்விடுமே! இயேசுவின் வேதனையை விட அவர்களின் வேதனைதான் பெரிதெனப் படுகிறது.
சுற்றிலும் பார்க்கிறார்கள். அவர்களது கண்களில் தட்டுப்பட்டவர், சீமோன். “வா! இவனோடு வந்து சிலுவையைத் தூக்கு” என்று கட்டாயப்படுத்துகிறார்கள். சீமோனும் வருகிறான். இயேசுவின் இழிநிலை அவனது இதயத்தை கிழிக்கச் செய்கிறது. ஒற்றை வார்த்தையால் உலகத்தை உண்டாக்கியவர், இன்று அற்ப மனிதனிடம் உதவி கேட்டு நிற்கிறார். காலம் முழுவதும் நம்மைச் சுமப்பவருக்கு, இன்று, தன் சுமையைச் சுமக்க முடியவில்லை. நிராயுதபாணியாக சீமோன் முகத்தை பார்க்கிறார். இயேசுவின் உடலில் ஊற்றெடுக்கும் வேதனை, சீமோனின் உள்ளத்திற்கு புரிகிறது. மறுப்பேதும் சொல்லாமல் இறைமகனுக்கு உதவ முன் வருகிறார். கிடைத்தற்கரிய பெரும் பேறு அவனுக்குக் கிடைத்துள்ளது. எல்லாம் வல்ல இறைவனின் மீட்புத் திட்டத்தில், தானும் ஒரு கருவியாய் இணைந்தது கண்டு பெரிதும் மகிழ்கிறான்.
“சிலுவையைச் சுமப்பவன் தான் உண்மைச் சீடன்” என்ற இயேசுவின் வார்த்தைக்கு அங்கு புதிய அர்த்தம் கிடைக்கிறது. இயேசுவின் மூன்றாண்டுப் பணி வாழ்வில் இயேசுவைப் பின் சென்ற இறுதி சீடனாக சீமோன் மாறுகிறான். இயேசுவின் கரத்தோடு, சீமோனின் கரம் இணைந்ததால், இயேசுவின் சுமை சற்றே எளிதாகிறது. உறுதி கொண்ட உள்ளத்துடன் இயேசுவின் பயணம் தொடர்கிறது.
சிந்தனையில்…
வாழ்விழந்து வறுமையில் வாடும் ஏழைகளுக்கு என்றாவது உதவியிருப்போமா? தொடரும் துன்பங்களால் தளர்ந்து போன மக்களை சீமோன் போல தாங்கிப் பிடிக்க என்றைக்காவது முயற்சி செய்திருப்போமா? பிரதி பலன் பாராது உதவி செய்த சீமோன் எங்கே? நாம் எங்கே?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! என்னோடு வாழும் ஏழைகளுக்கு என்னாலான உதவிகளைச் செய்யும் நல் மனதை எனக்குத் தாரும். ஆமென்.
6. சிங்கத்தின் முகத்தை சிறுமுயல் துடைக்கிறது.
தியானத்தில்…
இன்னும் கொஞ்ச தூரம் தான், கல்வார்p மலையின் உச்சத்தை அடைவதற்கு. இன்னும் கொஞ்ச நேரம் தான், இத் துயரம் மிகு பயணம் நிறைவடைவதற்கு. இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் தான். மனதிற்குள் மகிழ்ச்சியோடு தன் இலக்கை நெருங்கிறார். சீமோனின் துணையால் சிலுவைப் பாரம் சற்றே குறைந்தாலும் உடல் முழுதும் வேதனை நிறைந்துள்ளது. கசையடிக் காயங்களின் வலியால் உடல் முழுதும் உஷ்ணமாகிறது. தலையில் வைக்கப்பட்டுள்ள முள்முடி தசையைத் தாண்டி எலும்பைத் தொடுகிறது. அந்த முள்முடியின் கோரத் தாக்குதலால் முகம் முழுவதும் இரத்த மயம். நெற்றி முதல் தாடை வரை இரத்தத்தின் கோடுகள். வலியாலும் வேதனையாலும் துடிக்கிறார் இயேசு! இரத்தத் திட்டுகளால் அவரது ஒளி வீசும் திருமுகம் களையிழந்து அலங்கோலமாகிறது. கண்கள் வழியே வழிந்தோடும் இரத்தம் அவரது பார்வையை மறைக்கிறது. குருதியி;ன் கொடூத்தால் அவரது பார்வை மங்கலாகிறது.
நன்மை எது, தீமை எது என்று உலகிற்கே கற்றுக்கொடுத்தவர் பாதை எது, பள்ளம் எது என்று கூடத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார். கற்கள் எவை, முட்கள் எவை என்று அடையாளம் கூடத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறார்.
அப்போதுதான் நடக்கிறது அந்த வினோதம்! வல்லூறுகளைத் தாண்டும் மாடப்புறா போல, படைவீரர்களைத் தாண்டி வருகிறாள் வெரோணிக்கா என்னும் வீர மங்கை. இரத்தத் திட்டுகளால் நிறைந்திருக்கும் இயேசுவின் திருமுகம் அவருக்கு உள்ளத்தில் வலியை ஏற்படுத்துகிறது. ஆயிரம் துன்பங்களுக்கு நடுவிலும் அமைதியின் மறுவுருவாய் காட்சி தரும் இயேசுவைத் தன் கையிலுள்ள சிறு துணியால் துடைக்கிறாள.
கார்மேகம் விலகக் காட்சி தரும் கதிரவன் போல ஒளி வீசி பிரகாசிக்கிறது, இயேசுவின் திருமுகம். மன நிறைவோடு தன் கையிலுள்ள துணியைப் பார்க்கிறாள். இரத்தக்கரைகளோடு இயேசுவின் திருமுகம் அப்படியே பதிந்துள்ளது. தன் மீது வெரோணிக்கா காட்டிய பாசத்திற்குப் பரிசளித்துத் தன் கல்வாரிப் பயணத்தை தொடர்கிறார், இயேசு.
சிந்தனையில்…
நம் சுயநல வட்டத்தைத் தாண்டி என்றைக்காவது பொது நலப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறோமா? உதவி வேண்டி நிற்போரைக் கண்டும் காணாமல் எத்தனை முறை முகத்தைத் திருப்பியிருப்போம்? கேட்காமல் உதவிய வெரோணிக்கா முன், கேட்டும் உதவி செய்யாமல் நிற்கும் நாம் யார்?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! பிறரது துன்ப துயரங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நல் மனதைத் தாரும்! ஆமென்.
7. சந்தனப் பூவொன்று சகதியில் சாய்கிறது
தியானத்தில்…
கல்வாரிப் பாதை. இது மிகவும் கடினமான பாதை. கரடுமுரடான பாதை. பாதையெங்கும் பாதத்தைப் பதம் பார்க்கும் கற்கள் பரவிக்கிடக்கின்றன. வழியெங்கும் தேகத்தைக் கிழிக்கும் முட்கள் விரவிக்கிடக்கின்றன. ஆபத்துகளும் அபாயங்களும் மட்டும் தான் இப் பாதையில். இதில் தான் மீட்பரின் பயணம் நடந்துகொண்டிருக்கிறது. முந்திய இரவு கைது செய்யப்பட்டதிலிருந்து தொடரும் பல்வேறு வேதனைகளால் நிலைகுலைந்துவிட்டார் இயேசு. இயேசுவின் கல்வாரிப் பயணம் நடைபெற்றது ஒரு முற்பகல் வேளை. எனவே வேதனையின் கொடுமையோடு வெயிலின் கொடுமையும் சேர்கிறது. தொடரும் இக்கொடுமையால் முற்றிலும் தளர்ந்துவிடுகிறார் இயேசு. சோர்வுற்ற நேரங்களிலெல்லாம் படைவீரர்கள் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருப்பதால், துயரம் தொண்டையை அடைக்க வேதனைப் பெருமூச்சு விடுகிறார். சுற்றி நிற்கும் மக்கள் கூட்டமும் பரிசேயரும் அவரைத் தொடர்ந்து எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள். “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும்” என்ற உணர்வில் உள்ளம் உறுதியாகத்தான் இருக்கிறது. ஆனால உடலோ வலியால் துடிக்கிறது. தொடர்ந்து நடக்க எத்தனிக்கிறார் இயேசு, முடியவில்லை.
கண்கள் இருண்டு போக, கால்கள் சுருண்டு போக, மீண்டும் தரையில் விழுகிறார். அவர் மீது விழுந்த சிலுவை இன்னும் அவரை அதிகமாக அழுத்துகிறது. அழுது அரற்றக் கூட உடலில் பலமில்லாதததால் மண்ணில் புதைகிறார். சற்று முன் வெரோணிக்காவின் தயவால் துடைக்கப்பட்ட முகம் முழுவதும் மண்ணாகிறது. தன் வலிமையெல்லாம் ஒன்று திரட்டி எழ முயற்சிக்கிறார்…..முடியவில்லை…
குப்புற விழுந்து கிடக்கும் இயேசுவை கோபத்தோடு அடிக்கிறார்கள், மனதில் ஈரமே இல்லாத படைவீரர்கள். அவர்களது சாட்டை இயேசுவின் முதுகைப் பதம் பார்க்கிறது. படுத்த படுக்கையாய்க் கிடந்நவர்களையெல்லாம் எழ வைத்தவர், இங்கு எழுவதற்கு சக்தியற்று மண்ணோடு மண்ணாய் கிடக்கிறார்.
இத்தனை வேதனைக்கும் மேலாக, அவரது உள்ளம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. கல்வாரி மலையும், தன் சிலுவை மரணமும் மனத் திரையில் காட்சியாய் வந்து போகிறது. துன்பத்தைக் கண்டு துவண்டு போகாமல், எழுந்து தம் பயணத்தைத் தொடர்கிறார். இயேசு.
சிந்தனையில்…
“எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம்” என்ற மனநிலையோடு எத்தனை முறை பிறரது துன்பத்தில் ஆதாயம் தேட முயன்றிருப்போம்? சறுக்கி விழுந்தோரை கை தூக்கி விட என்றாவது முயன்றிருப்போமா? விழுந்து கிடக்கும் இயேசுவை, விடாமல் அடிக்கும் படை வீரர்களைப் போல் தானே நாமும் இருந்திருப்போம்?
செபத்தில்…
எனக்காக பாடுபட்ட இயேசுவே! கண்ணீரோடும், கவலையோடும் இருப்போரைக் கை தூக்கிவிடும் நல் மனதை எனக்குத் தாரும். ஆமென்.
8. விளக்கின் நிலை கண்டு விட்டில் பூச்சி அழுகின்றது
தியானத்தில்…
இறைமகனின் இறுதிப் பயணம் எருசலேம் நகர எல்லையை நெருங்குகிறது. குற்றுயிரும் குலையுயிருமாய்த் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு தள்ளாடி வருகிறார் இயேசு. அவர் படும் துன்பத்தைப் பார்த்தால் கற்களும் கூட கண்ணீர் விட்டு அழும். ஆனால் ஈவு இரக்கமின்றி அவரைத் துன்புறுத்திக் கொண்டே வருகிறது ஆதிக்க வாக்;கம்.
தங்கள் வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள், மக்கள். மாசற்ற செம்மறியின் மரணத்தை நோக்கியப் பயணத்தைப் பார்க்க பெருங்கூட்டமே வழியெங்கும் திரண்டு நிற்கிறது. அவரது பாடுகளைக் கண்டு பரிதாபப்படுவோர் சிலர். அவரது வேதனைகளைக் கண்டு எள்ளி நகையாடுவோர் பலர். அப்படி பரிதாப்படும் பாமர மக்கள் கூட்டத்தில் எருசலேம் நகரத்துப் பெண்களும் அடக்கம். நேற்று வரை நலிவுற்றோரின் நம்பிக்கை நட்சத்திரமாக உலவிக்கொண்டிருந்தவர், இன்று தானே நலிவுற்று நடு வீதியில் உலா வருவது கண்டு அவர்களது இதயங்கள் இரக்கப்படுகின்றன. தங்கள் அழுகை ஆண்டவர் இயேசுவுக்கு ஆறுதல் தரும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறொன்று. எருசலேம் மகளிரின் கண்ணீர் தன் இலட்சியப் பயணத்திற்கு இடையூறு செய்வதாகவே எண்ணுகிறார், இறைமகன்! ஆறுதல் சொல்ல முடியாத அவ நிலையில் இருக்கும் அவர், எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
என் பாடுகளுக்காக அழ வேண்டாம்! உங்கள் பாவங்களுக்காக அழுங்கள்!
என் துன்ப நிலைக்காக அழ வேண்டாம்! உங்கள் துயர நிலைக்காக அழுங்கள்
ஏனெனில் நான் பச்சை மரம்! நீங்களோ பட்ட மரங்கள்!
கடுந்துயரிலும் இயேசுவின் குரல் கணீரென்று ஒலிக்கிறது. இயேசுவோடு வரும் ஆதிக்க கூட்டத்திற்கு, இயேசுவின் வார்த்தைகள் அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஆனால் அவர்களுக்குத் தெரிந்திருக்காது, இயேசுவின் வாய்ச்சொல் மட்டும் அல்ல, வாழ்வே மக்களுக்காகத்தான் என்று. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் கொண்ட கொள்கையில், குலையாத உறுதியுடன் தொடர்ந்து நடக்கிறார். இயேசு.
சிந்தனையில்…
பிறர் துன்பத்தை என்றைக்காவது நம் துன்பமாக எண்ணியிருக்கிறோமா? அவல நிலையில் உள்ள இயேசுவுக்கு ஆறுதல் அளிக்க முற்படும் எருசலேம் நகரப் பெண்கள் போல என்றைக்காவது வாழ்ந்திருப்போமா? ஆறுதல் தர முயலும் பெண்களுக்கே, ஆறுதல் தரும் இயேசுவைப் பின்பற்றாமல் கிறிஸ்தவன் என்று நம்மால் எப்படிச் சொல்லிக்கொள்ள முடிகிறது?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! என் துன்பத்தைப் பற்றி நினைக்காமல் பிறர் துன்பத்தைத் தீர்;க்கப் பாடுபடும் நல் மனதைத் தாரும். ஆமென்.
9. நீதியின் சூரியன் நிலத்தில் விழுகிறது
தியானத்தில்…
இதோ! எருசலேம் நகரத்தை தாண்டிவிட்டார், இயேசு. ஒருவாரத்திற்கு முன்பு தான் மிகுந்த ஆரவாரத்துடன் அழைத்து வரப்பட்டார். இன்றோ, அமைதியாக வெளியேறுகிறார். உள்ளே நுழையும் போது, அவரை கோவேறுக் கழுதை சுமந்துகொண்டு சென்றது. இப்போதோ அவர் சிலுவையைச் சுமந்துகொண்டு வெளியேறுகிறார். உள்ளே நுழையும் போது ஆரவாரத்துடன் மக்கள் அவரை மாட்சிப்படுத்தி அழைத்துச் சென்றனர். வெளியேறும் போதோ ஏளனப்படுத்தி, அவமானப்படுத்தி அழைத்துச் செல்கின்றார். கொடுமையான சித்திரவதைகளால் உள்ளம் குமுறுகிறார் இயேசு. தன் துயரத்தின் பாதையில் முக்கால் பங்கு கடந்துவிட்டார். இன்னும் பாக்கி இருப்பது கொஞ்ச தூரம்தான். கண்ணுக்கெட்டும் தூரத்தில் கல்வாரி மலையுச்சி. அந்த எல்லையை அடைந்தவுடன் தன் மண்ணக வாழ்வு முற்றுப்பெறப் போகிறது என உள்ளத்தில் எண்ணுகிறார். ஆனால் மீதமிருக்கும் கொஞ்ச தூரத்தையும் கடப்பதற்கு உடலில் தெம்பில்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை குருதியால் குளித்துவிட்டதால் உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லை.
உச்சி வெயிலில், மலை உச்சியை நோக்கி பாரமான சிலுவையோடு நடப்பதால், கால்கள் இரண்டும் மரத்துப்போய் விட்டன. முள்முடியின் கொடூரத்தால் அவரது திருமுகம் வனப்பை இழந்துவிட்டது. வலி தாங்காமல் கத்திக் கதறியதில் தொண்டையும் வறண்டு போய்விட்டது. இனி கண்களிலிருந்து வடிவதற்குக் கண்ணீர் கூட இல்லாமல் கண்ணீரும் வற்றி விட்டது. உடலில் வேறு இடமே இல்லாத அளவிற்கு கசையடிக் காயங்கள். அவற்றிலிருந்து இடைவிடாமல் வடிந்து கொண்டிருக்கும் இரத்தம் 33 ஆண்டுகளாக தேக்கி வைத்திருந்த சக்தி அனைத்தையும் ஒரே நாளில் நீக்கி விட்டதைப் போன்று ஒரு உணர்வு. எல்லாம் சேர்ந்து இயேசுவை மீண்டும் நிலைதடுமாறச் செய்கின்றன.
தொடர்ந்து நடக்க முடியாத படி தொய்ந்துபோன இயேசு மீண்டும் கீழே குப்புற விழுகிறார். இன்னும் ஒரு சில அடிகள் எடுத்துவைத்தால் தன் கொலைக்களம் வந்துவிடும். என்றாலும் தொடரும் தாக்குதலால் செய்வதறியாது, எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கிறார் இயேசு. படைவீரர்கள் வழக்கம் போல் அடிக்கிறார்கள். மரணத்தின் விளிம்பில் நிற்கும் இயேசு, தத்தித் தத்தி எழுகிறார், மீண்டும் நடக்க.
சிந்தனையில்…
விழுந்தபோதெல்லாம் எழுந்த இயேசுவைப் போல, எத்தனை முறை எழுந்திருப்போம்? சிறு துன்பம் என்றாலே சுருண்டு படுத்துக்கொண்டு, முயற்சியே இல்லாமல் எத்தனை முறை வாழ்ந்திருப்போம்? விழுவதே எழத்தான் என்று வாழ்ந்து காட்டிய இயேசுவை எப்படி நம் வாழ்வில் பிரதிபலிக்கப் போகிறோம்?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! என் கவலைகள் பெரிது என எண்ணிக் கவிழ்ந்துவிடாமல் எழுந்து நடக்க நல் மனதைத் தாரும். ஆமென்.
10. நீலவானம் நீர்வானம் ஆகிறது
தியானத்தில்…
கல்வாரி மலை, கயவர்கள் பலரை காவு வாங்கிய மலை, மன்னிக்க முடியாத குற்றங்கள் செய்தோர்க்கும் மரண தண்டனை வழங்கி மகிழ்ந்த மலை. யூதருக்கும் உரோமையர்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்திய பலரது இறுதி மூச்சு இங்கு தான் பிரிந்துள்ளது. அந்த கடைந்தெடுத்த கயவர்களின் வரிசையில் இப்போது கனிவே உருவான இயேசு. வாழ்நாள் முழுவதும் நினைவில் கூட தீமை செய்யாத அவருக்கு ஒரேயடியாக தீங்கு செய்ய ஒய்யாரமாய் நிற்கிறது ஒரு கூட்டம். அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட இடத்திற்கு இயேசு வந்துவிட்டார். அரவணைக்கவோ, ஆறுதல் சொல்லவோ முடியாத நிலையில் நிராயுதயாணியாக நிற்கிறார் இயேசு.
அவர் அணிந்திருந்த ஒற்றை ஆடையையும் உருவுகிறார்கள் படைவீரர்கள். தன் ஒரே மகளுக்காக தையலே இல்லாமல் அன்னை மரியாள் தயாரித்துக்கொடுத்த அங்கி, அதுவும் அந்தப் பரிசேயக் கூட்டத்தின் கண்களை உறுத்தியிருக்கிறது. மறுப்புச் சொல்லவோ, தடுக்கவோ கூட இயேசுவால் முடியவில்லை. கசையடிக் காயங்களின் இரத்தத்தோடு சேர்ந்து ஒட்டியிருந்த அந்த அங்கி அவரது தசையையும் சேர்த்து பிய்த்துக் கொண்டு வருகிறது. காய்ந்திருந்த காயங்கள் மீண்டும் எழுச்சிபெற்றது போல குருதியைக் கொப்பளிக்கின்றன. மரண வேதனையில் துடிக்கிறார் இயேசு. அவரது நிர்வாணத்தையும், அவமானத்தையும் கூட இரசிக்கிறது, அந்த இதயமே இல்லாத இருளின் கூட்டம்.
ஒன்றுமே இல்லாமல் உலகிற்கு வந்தவர், உலகில் தன் வாழ்நாள் முழுவதுமே ஒன்று விடாமல் எல்லாவற்றையும் பிறருக்குக் கொடுத்தார். இப்போது அதே ஒன்றுமில்லா நிலை. அணிந்திருந்த ஆடை கூட அடுத்தவன் கைக்குப் போய் விட்ட அவலநிலை. மரணத்தைக் தருவதற்கு முன்னும் அதற்கு விலையா? மானத்தைக் கூட எடுத்துக்கொண்டார்கள் பாவிகள். தமது நேரம் நெருங்குவதை நினைத்து ஆழ்ந்த அமைதியுடன் நிற்கிறார், இயேசு.
சிந்தனையில்…
எத்தனை முறை நம் சொல்லால், செயலால் பிறரை அவமானப்படுத்தியிருப்போம்? பிறர் நம்மை விட வளர்ச்சி அடைவது கண்டு மனம் பொறுக்காமல் அவர்களுக்குக் குழிபறிக்க நினைத்திருப்போம்? இயேசுவின் சாயலில் உள்ள மனிதர்களை நாம் அவமானப்படுத்தும் போதெல்லாம் அவமானப்படுவது இயேசுவும் தானே?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! பிறரை அவமானப்படுத்தி மகிழாமல், அவர்களது வளர்ச்சியில் மகிழ்ச்சி காணும் நல் மனதை எனக்குத் தாரும். ஆமென்.
11. இலவம் பஞ்சில் இரும்பு பாய்கிறது
தியானத்தில்…
அனைத்தையும் இழந்துவிட்டு, அநாதையாய்க் கூனிக் குறுகி நிற்கிறார், இறைமகன். இவ்வளவு நேரம் சோம்பலுடன் நடந்து வந்தவர்கள் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மானிட மகனின் மரணத்திற்கு தாயாரிப்புப் பணிகள் மும்முரமாய் நடந்துகொண்டிருக்கின்றன. சிலுவையை நடுவதற்கு குழி தோண்டப்படுகின்றது. சிலுவை மரத்தில் இயேசுவைத் தாங்கிப் பிடிப்பதற்காக கூறிய ஆணிகள் கொண்டுவரப்படுகின்றன. தனது மரணத்திற்கான முன்னேற்பாடுகளை மவுனமாய் கவனித்துக் கொண்டிருக்கிறார் இயேசு. அவரோடு சேர்த்துக் கொல்வதற்காக இரண்டு கள்வர்களை சிலுவையில் அறைகிறார்கள்;. தன் மரணத்தை நினைத்துக் கவலைப்படாத இயேசு, அந்த கள்வர்களின் கதறலைப் பார்த்து இரக்கப்படுகிறார். இறக்கப்போகும் போது கூட பிறர் மீது இரக்கப்படும் எண்ணம் யாருக்குதான் வாய்க்கும்! இயேசுவைத் தவிர? ஆனால் இவை எதையுமே தெரியாத படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையோடு சேர்த்து படுக்க வைக்கிறார்கள்.
ஒட்டுத் துணி கூட இல்லாத இயேசுவின் உடல் இரத்தத்தால் சிலுவையோடு சேர்ந்து ஒட்டிக்கொள்கிறது. ஆணிகளால் அறையும் போது, ஆடாமல் இருப்பதற்காக அவரது கைகளையும், கால்களையும் சிலுவை மரத்தோடு சேர்த்துக் கட்டுகிறார்கள், காவலுக்கு வந்த ஏவல் கூட்டம். சலனம் ஏதுமின்றி, சஞ்சலம் சிறிதுமின்றி அறைவதற்கு ஏதுவாக தன் திருக்கரங்களை விரித்துக்காட்டுகிறார், இயேசு. கூரிய ஆணிகளால் அவரது கைகளையும் கால்களையும் சேர்த்து அறைகிறார்கள்.
இயேசுவின் உடலில் மிச்சமிருந்த இரத்தம் பெருக்கெடுத்துப் படைவீரனின் முகத்ததில் தெரிக்கிறது. அவன் பாவங்களைத் தன் இரத்தத்தைத் தெளித்துத் துடைக்கிறார் இயேசு என்பதை அவன் அறியாமல், அவன் ஆணியை இன்னும் வேகமாக அடிக்கிறான். உள்ளத்தைத் துளைக்கும் வேதனையோடு இயேசு கதறுகிறார். அவர் துடித்த துடிப்பைப் பார்த்தால் கல்வாரி மலையின் கற்கள் கூட கண்ணீர் வடிக்கும். அவரது கதறலைப் பொருட்படுத்தாமல், அவரது உடலை மூன்றே ஆணிகளுக்குள் முடக்குகிறார்கள், படைவீரர்கள்.
சிந்தனையில்…
எத்தனை முறை நன்மைகளை மட்டுமே செய்து வாழும் நல்லவர்களை அவதூறாப் பேசியிருப்போம்? நமது சுயநலப் போக்கிற்காக எல்லாருக்கும் நன்மை பயக்கும் நற்செயலுக்குத் தடை போட்டிருப்போம்? நன்மைகளின் நாயகனை ஆணிகளால் முடக்கும் படைவீரர் கூட்டமும், நன்மைதரும் செயல்களை முடக்கும் நாமும் செய்து கொண்டிருப்பது ஒரே வேலையைத் தானே?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! என்னால் முடிந்தவரை எல்லாருக்கும் நன்மை தரும் செயல்களையே செய்து வாழும் நல்மனதை எனக்குத் தாரும். ஆமென்.
12. உலகிற்கே ஒளிதந்த அகல்விளக்கு அணைகிறது
தியானத்தில்…
சூரியனின் சுடுகதிர்கள் உச்சந்தலையைத் தொடும் நேரத்தில், நன்மையின் மறுவுருவாம் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். சிலுவை மரத்தைக் கயிறுகளால் கட்டி நிற்க வைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை எல்லாம் நிறைவேறி விட்டது. மூன்று ஆண்டுகள் யூதேயா முழுவதும், சென்ற இடமெல்லாம் நன்மையே செய்தவர் மூன்று ஆணிகளால் சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார். நம் பாவங்களுக்காக மனுவுரு எடுத்து வந்த வார்த்தையான இறைவன், வானுக்கும் பூமிக்கும் இடையே தொங்கிக்கொண்டிருக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் வேலை முடிந்ததும் கிளம்பிவிட்டது. தங்களை எதிர்த்தவன் கதை முடிந்துவிட்டது என எண்ணி, பரிசேயர் கூட்டமும் பறந்துவிட்டது. காவலுக்கு இருக்கும் ஒருசில வீரர்களையும் அழுது கொண்டு நிற்கும் பெண்களையும் சிலுவையில் தொங்கும் திருடர்களையும் தவிர வேறு யாரும் இயேசுவோடு இல்லை. “யூதர்களின் அரசன்” என்ற குற்றச்சாட்டுப் பலகை இயேசுவின் சிலுவையை அடையாளம் காட்டுகிறது.
வலியும் வேதனையும் தாங்க முடியாமல், உடைந்த குரலில் “தாகமாயிருக்கிறது” என்று கதறுகிறார் இயேசு. கல்நெஞ்சம் கொண்ட கயவர்கள் கசப்புக் காடியால் அவரது தொண்டையை நனைக்க முயலுகிறார்கள். பசித்தாலும் புல்லைத் தின்னாத புலியைப் போல, அதைக் குடிக்க மறுக்கிறார் இயேசு. மரிக்கப் போகும் அந்த நிலையிலும் கூட மனம் திரும்பிய கள்வனை மன்னிக்கிறார், இயேசு. சிலுவையில் தொங்கும் செம்மறியைப் பார்த்து சில்வண்டுகள் சில எள்ளி நகையாடுகின்றன. அவரது ஒரே அங்கி யாருக்கு என்று சீட்டுக்குலுக்கி விளையாடுகிறார்கள் படைவீரர்கள். எல்லாவற்றையும் அமைதியாகப் பார்க்கிறார் இயேசு. மூன்று மணிநேர வேதனைக்குப் பின் தந்தையின் திருப்பெயரைக் கூவியழைத்து உயிர் விடுகிறார்.
(சிறிது நேரம் அமைதியாக செபிப்போம்)
இNசுவின் இறப்பை அறிந்து இயற்கைத் துடிக்கிறது. பூமி பிளக்க, சூறாவளி சுழல்கிறது. வழிபாடு செய்யப்பட வேண்டியவரின் வாழ்வு முடிந்துவிட்டதை எண்ணி, திருக்கோவில் திரை கூட இரண்டாகக் கிழிகிறது. ஆழ்ந்த அமைதியுடன் உயிரற்ற உடலாய்த் தொங்குகிறார், இயேசு.
சிந்தனையில்…
எத்தனை முறை நமது போலியான மகிழ்ச்சிக்காகத் தெரிந்தே தவறு செய்திருப்போம்? நீதியின் குரல்வலையை நெரித்திருப்போம்? அநியாயம் நடப்பது கண்டு அமைதியாகச் சென்றிருப்போம்? உண்மைக்கும் நன்மைக்கும் எதிராக நாம் செயல்படும் போதெல்லாம் இயேசுவின் உயிரைப் பறித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பது நமக்குப் புரிகிறதா?
செபத்தில்…
எனக்காப் பாடுபட்ட இயேசுவே! பிறருக்காக வாழ்ந்த உம்மைப் பின்பற்றி தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியத்தை எனக்குத் தாரும். ஆமென்.
13. வேரறுந்த மரத்தை விழுது சுமக்கிறது
தியானத்தில்…
இயேசுவின் கதை முடிந்துவிட்டது. சாமானிய மக்களுக்கு ஆதராவாக சட்டம் பேசிய கலகக்காரனுக்கு கடைசி மூச்சு நின்றுவிட்டது. தங்கள் திட்டம் எதிர்பார்த்தவாறே நிறைவேறியதால், எல்லையற்ற ஆனந்தத்தில் திளைக்கிறது, சமயத் தலைவர்கள் என்னும் சதிகாரக்கூட்டம். இங்கு இயேசுவின் இறப்பை உறுதிசெய்யத் துடிக்கிறார்கள், படைவீரர்கள். அவர்கள் உயிரற்ற உடலைக் கூட துன்புறுத்தும் துஷ்டர்கள். ஈட்டியால் இயேசுவின் விலாவைத் துளைக்கிறார்கள். ஆனால் இயேசுவின் கடைசிச் சொட்டு இரத்தமும் தண்ணீரும் கூட அவனை அர்ச்சிக்கிறது. நல்மனம் கொண்டோர் சிலர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள். பாதை முழுவதும் இயேசுவோடு பயணித்த அவரது தாய் மரியாவின் மடியில் அவரது உயிரற்ற உடலைக் கிடத்துகிறார்கள்.
வார்த்தைகளினால் சொல்ல முடியாத வேதனையில் துடிக்கிறாள் அன்னை மரியாள். பாலூட்டிச் சீராட்டிப் பாசமாய் வளர்த்த மகன் பாடையாய்க் கிடப்பதைக் கண்டு பதறுகிறார் அந்தத் தாய். “ஒரு வாள் உம் உள்ளத்தை ஊடுருவும்” என்று சிமியோன் முன்னுரைத்தார். அன்னைக்கோ ஓராயிரம் வாள்கள் உள்ளத்தைத் தைத்தது போன்ற உணர்வு. களையிழந்து காட்சியளிக்கும் திருமகனைக் கண்டு, கலங்குகிறாள் அந்தத் தாய். இந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவும் பிரிந்துவிட்டதை எண்ணி சொல்லொண்ணா வேதனைப்படுகிறாள் அந்தத் தாய். மனித குலம் வாழ்வதற்காக தன் மகனையே தாரை வார்த்துத் தந்த அந்த வீரத்தாய்க்கு ஆறுதல் சொல்ல யாருமின்றி உள்ளுக்குள் குமுறுகிறார்.
ஆனால் இத்தனை வேதனைகளையும் தாண்டி அவருக்குள் ஒரு நிறைவு. கடைசி மூச்சு வரை கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றிய மகனைக் கண்டு மன நிறைவு அடைகிறார். தன்னையே பலியாக்கி தரணியை மீட்டெடுத்த மகனைக் கண்டு மாதாவின் உள்ளம் பெருமைப்படுகிறது. ஆம், இவள் ஒரு அதிசயத் தாய். தன் மகன் இறந்தாலும் தரணி நலம் பெற வேண்டும் என எண்ணும் ஆச்சரியமான தாய். பலவிதச் சிந்தனைகளோடு தன் மகனைப் பார்த்தவாறு அமைதியாக இருக்கிறாள் அன்னை மரியாள்.
சிந்தனையில்…
என்றைக்காவது லட்சத்திற்காக வாழாமல், அன்னை மரியாளைப் போல இலட்சியத்திற்காக வாழ்ந்திருப்போமா? நமது துன்பத்தை விட பிறரது நல்வாழ்வுதான் பெரிது எனக் குறைந்தபட்சம் நினைத்தாவது பார்த்ததிருக்கிறோமா? தரணி வாழ தன் மகனையே தாரை வார்த்த தாயைப் பின்பற்ற நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! என் சுயநலத்தை விட, என் அண்டை அயலாரின் நல்வாழ்வே பெரிது என எண்ணும் நல்மனதை எனக்குத் தாரும். ஆமென்.
14. தங்க நாணயம் தரைக்குள் புதைகிறது
தியானத்தில்…
பாவிகளை மீட்க வந்த பரமனின் மூச்சு பாவிகளால் நிறுத்தப்பட்டுவிட்டது. இயேசுவால் நலம் பெற்றோர், வளம் பெற்றோர், அவரால் வாழ்வடைந்தோர் அனைவருமே அவரை விட்டு விட்டுப் போய்விட்டனர். இப்போது அவருடன் எஞ்சியிருக்கும் உறவுகள் அவரது அன்புத் தாயும், அன்புச் சீடரும் மட்டுமே. வாழ்க்கை முழுவதும் பிறருக்காகவே வாழ்ந்துவிட்டதால் இயேசுவுக்கென்று வசதிவாய்ப்புகள் எதுவுமில்லை. தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாததால் தான், தலைசாய்க்கவும் இடமில்லாமலே வாழ்ந்து வந்தார். உயிரிழந்து உருக்குலைந்து போய்விட்ட அவரது உடலை அடக்கம் செய்வதற்குக் கூட இடமில்லை, ஆட்களுமில்லை. அவரால் பயன்பெற்ற எல்லோரும் பயந்து ஓடிவிட, ஆபத்துக்கு உதவி செய்ய வந்தவர் அரிமத்தியா யோசேப்பு.
ஆளுநரிடம் அனுமதி பெற்று அவரது உடலை அடக்கம் செய்ய வந்தார். பரபரப்போடும் பரிதவிப்போடும் தேடிக் கண்டுபிடித்தார்கள் கல்லறையை. ஏனென்றால் பாஸ்கா விழாவிற்கு முன்பாக அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. உலகனைத்திற்கும் உரிமையாளராக இருந்தும், உடைமை என்று எதுவும் இல்லாததால் வாடகைக் கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். கல்லான இதயங்களை எல்லாம் கனிவுள்ள இதயங்களாக மாறக் கற்பித்தவர் இன்று கல்லறைக் குகைக்குள் அடக்கப்பட இருக்கிறார்.
“அசைக்க முடியாதவாறு கற்பாறையின் மேல் வீடுகட்டுங்கள்” என்று சொன்னவர், இப்போது கல் குகைக்குள் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். விண்ணகம் விட்டு மண்ணகம் வந்த போது தனக்கென அவர் எடுத்து வந்தது இந்த உடல் ஒன்றைதான் அதையும் கொடுத்துவிடும் எண்ணத்துடன், அசையாத சடலமாய் இருக்கிறார். கோடித் துணியும் வெள்ளைப் போளமும் கொண்டு வந்து அவரது திருவுடலை அலங்கரிக்கிறார்கள். வாசனைத் திரவியமும், நறுமணத் தைலமும் பூசுகிறார்கள். எல்லாம் முடிந்ததும், நாசரேத்து நாயகனை கல்லறையில் வைத்து கல்லால் மூடிவிடுகிறார்கள். ஆம், மூன்று ஆண்டுகளாய் முழங்கிய குரலுக்கு, மூன்றே நாட்களில் முடிவுரை எழுதப்பட்டு, முகாரி ராகம் பாடி முடித்தனர்.
சிந்தனையில்…
இயேசுவைப் போல நீதிக்கான போராட்டத்தில் நம்மையே பலிகொடுக்க நாம் தயாராக இருக்கின்றோமா? யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, நாம் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் தானே நமது வாழ்வு சென்று கொண்டிருக்கின்றது? தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து இயேசுவைப் போல நாம் எப்போது மாறப்போகிறோம்?
செபத்தில்…
எனக்காகப் பாடுபட்ட இயேசுவே! எனக்காக மட்டுமே நான் வாழாமல் பிறர்க்காக வாழவும், தேவைப்பட்டால் என்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்கவும் எனக்கு வரம் தாரும். ஆமென்.
முடிவுரை
இதோ, கல்வாரிப் பயணத்தைக் கடந்து வந்திருக்கின்றோம். நம் ஆண்டவரின் பாடுகள் அனைத்தையும் உள்ளத்தால் உணர்ந்திருக்கின்றோம். தன்னையே வெறுமையாக்கி, அடிமையின் நிலையை விரும்பி ஏற்ற நம் தலைவர் இயேசு, நமக்காகப் பட்ட பாடுகள் யாவும் நிச்சயம் நம்மையும் வேதனைப்படுத்தியிருக்கும். அன்பு செய்ததால், அருளைத் தந்ததால், பாசம் காட்டியதால், பகிர்வைப் போதித்ததால், உண்மையைச் சொன்னதால், உலகிற்கு உழைத்ததால், அநீதியை எதிர்த்ததால், ஆளும் வர்க்கத்தைப் பகைத்ததால், இயேசுவுக்கு இந்த நிலைமை. இயேசுவின் இந்தப் பாடுகள் நம்மை மனம் மாற அழைக்கின்றன. அன்று இயேசுவின் அவல நிலையை நினைத்துக் கண்ணீர் வடித்து விட்டுக் கலைந்து சென்ற மக்களைப் போல, நாமும் கண்ணீர்வடித்து விட்டுக் கலைந்து சென்று விட்டால், நாம் செய்த சிலுவைப் பாதையால் பயன் ஒன்றுமில்லை. மாறாக, இக்கல்வாரிப் பயணம் நமக்கு உணர்த்தும் பாடங்களை உள்ளத்தில் உணர்ந்து, அவை கற்பிக்கும் பாதையில் பயணிக்கத் தயாராக இருக்க வேண்டும். இயேசுவின் பாடுகளை இதயத்தில் ஏற்றதோடு நின்று விடாமல், அவை உணர்த்தும் பாடங்களை வாழ்வாக்குவோம். தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழ்ந்த நம் இயேசுவின் வழியில் நாமும் பிறர்க்காக வாழ்ந்து, மண்ணில் இறைவனின் உண்மை சாட்சிகளாக வாழ்வோம்.
Comments
Post a Comment