பாஸ்கா காலம் - மூன்றாம் ஞாயிறு

 


நற்செய்தி நூல்களைப் புரட்டிப் பார்த்தால் இயேசுவின் வாழ்வில் பயணங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நம்மால் உணர முடியும். அவரது பிறபபு முதல் விண்ணேற்றம் வரை அவரது வாழ்வில் அவர் மேற்கொண்ட பயணங்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. தாயின் வயிற்றில் அவர் கருவாக இருந்தபோதே நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு மேற்கொண்ட முதல் பயணத்தில்தான் அவரது மண்ணக வாழ்வின் தொடக்கமே ஆரம்பித்தது. சீடர்கள் அனைவரும் கூடியிருக்க, அவர்களது கண்கள் முன்பாக மண்ணகத்திலிருந்து விண்ணகத்தை நோக்கிப் பயணித்த அவரது விண்ணேற்றம்தான் மண்ணக வாழ்வில் அவரது இறுதிப் பயணம். கலிலேயா, யூதேயா, சமாரியா, எருசலேம், கப்பர்நாகூம் என தன் வாழ்வு முழுவதும் எத்தனையோ இடங்களுக்குப் பயணித்துக் கொண்டேயிருந்தார் இயேசு. ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொருவிதமான பாடத்தை மக்களுக்கும் சீடர்களுக்கும் கற்றுத்தந்துகொண்டே இருந்தார். 

இன்றைய நற்செய்தியும் இயேசுவின் ஒரு பயணத்தைப் பற்றித்தான் பேசுகின்றது. இஸ்ரயேல் மக்களின் அரசியல், சமூக, ஆன்மீகத் தலைநகரான எருசலேமிலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள எம்மாவு என்ற இடத்திற்கு இரண்டு சீடர்களோடு இயேசு மேற்கொண்ட பயணம்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு யாரென்றே தெரியாமல் அவரோடு மோசே தொடங்கி இறைவாக்கினர் அனைவரது நூல்களிலும் மெசியாவைக் குறித்து எழுதப்பட்ட கருத்துகளை விவாதிக்கிறார்கள். “எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும் தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ” என்று கூறி அப்போதைய நாட்டு நடப்புகளைப் பற்றி பேசுகிறார்கள். ‘நாசரேத்து இயேசுவைத் தெரியும்’ என்று சொல்வதே ஆபத்து என்று எண்ணி சீடர்கள் எல்லாரும் அஞ்சிக்கொண்டிருக்க, அதே இயேசுவை “கடவுளுக்கும் மக்களுக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்” என்று பாராட்டி அறிக்கையிடுகிறார்கள். தாங்கள் இயேசுவின் குழுவைச் சார்ந்தவர்கள் என்று துணிவோடு ஒத்துக்கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் இயேசுவின் உயிர்ப்பை நம்பமுடியாமல் பேசும்போது “அறிவிலிகளே” என்று யாரென்றே தெரியாத வழிப்போக்கரிடம் தி;ட்டுவாங்கிக்கொண்டும் அந்த சீடர்கள் பயணிக்கிறார்கள். 

ஆனால் இத்தனைக்குப் பிறகும் அவர்கள் தவறிய இடம் ஒன்றே ஒன்று தான். தங்களோடு நெருங்கி நடந்து கொண்டிருந்த இயேசுவை அவர்கள் உணரவில்லை. தங்களோடு பேசிக்கொண்டிருக்கும் இயேசுவைக் கண்டுகொள்ள முடியாதவாறு அவர்களது கண்கள் மூடியிருந்தன. புறக்கண்களுக்கு வழிப்போக்கராகக் காட்சிதரும் மனிதர் தங்கள் தலைவரும் மீட்பருமாகிய இயேசு என்பதை அறிந்துகொள்ளாத அளவிற்கு அகக்கண்கள் மூடப்பட்ட பார்வையற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். 

இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே இப்படி இயேசுவைக் கண்டுகொள்ளாத, உணர முடியாத பலர் இருந்திருக்கிறார்கள். இயேசுதான் இஸ்ரயேலின் மீட்பர் என்பதை உணராமல் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்ற பரிசேயர்கள், சதுசேயர்கள், தலைமைக் குருக்கள், இயேசுதான் கடல்மீது நடக்கிறார் என்பதை உணராமல் அவரைக் கண்டு அஞ்சிய சீடர்கள், இயேசு வழங்குவது முழுமனித விடுதலை என்பதை உணராமல் அவரை வெறும் அரசியல் விடுதலை தருபவராக எண்ணி அவரது ஆட்சியில் சிறப்பு அரியணைகளைக் கேட்ட செபதேயுவின் மக்கள், இரவுமுழுவதும் அவரோடு உரையாடினாலும் அவரை முழுமையாக உணராத நிக்கதேம், வரவிருப்பவர் இயேசுதான் என்பதை முன்னறிவித்து சுட்டிக்காட்டியவராக இருந்தும் அவரை உணராமல் அவரிடமே ஆளனுப்பிக் கேட்ட திருமுழுக்கு யோவான், இயேசுதான் உயிர்த்த ஆண்டவராகத் தன்முன் நிற்கிறார் என்பதை உணராமல் அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணிய மகதலா மரியா.... இப்படிப் பலர் தங்களோடு இருக்கும் இயேசுவைக் கண்டுகொள்ளாமல், உணராமல் இருந்ததை விலிலியம் பதிவுசெய்கின்றது. “அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவா 1:14). “காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது. கழுதை தன் தலைவன் தனக்குத் தீனிபோடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது. ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை. என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை” (எசா 1:3).

நமது வாழ்விலும்கூட பலநேரங்களில் இப்படி நடக்கலாம். நம்மோடு இருக்கும் நம் ஆண்டவரை அறிந்து கொள்ளாதவர்களாக, கண்கள் மூடப்பட்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆலயத்தில் ஆண்டவரை ஒவ்வொரு நாளும் தரிசிக்கின்ற நாமும் நமது அன்றாட வாழ்வில் நம்மோடு நெருங்கி நடந்து வரும் இயேசுரை உணராமலேயே அவரைத் தேடிக்கொண்டிருக்கலாம். இன்றைய முதல் வாசகம் சொல்வது அதைத்தான். இயேசு யாரென்பதை உணராதவர்கள், நாசரேத்து இயேசு கடவுளின் மகன் என்பதை அறியாதவர்கள், மக்களைப் பாவத்திலிருந்து மீட்பவர் இயேசு என்ற உண்மையைக் கண்டுகொள்ளாதவர்கள் யூதர்கள் என்பதை மிகத்தெளிவாக திருத்தூதர் பேதுரு எடுத்துரைக்கிறார். “கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக மக்கள் நடுவில் வல்லசெயல்களையும், அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார்.” ஆனால் மக்களோ அவரைக் கண்டுகொள்ளவில்லை. விளைவு, “திருச்சட்டம் அறியாதார்மூலம் நீங்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்.” நம்முடைய வாழ்க்கையிலும் இது நடக்கும். நம்மோடு இருக்கும் இயேசுவை உணர மறுப்பது மட்டுமின்றி, அவரை உதாசீனப்படுத்துபவர்களாக நாம் பலவேளைகளில் இருக்கிறோம்.

பழைய கதை ஒன்று நினைவிருக்கலாம். பக்தர் ஒருவரின் வீட்டிற்குக் கடவுள் வருவதாகக் கனவில் தோன்றிச் சொல்கிறார். பல்வேறு முன்னேற்பாடுகளுடன் கடவுளை வரவேற்கக் காத்திருக்கின்றார் பக்தர். குறிப்பிட்ட அந்த நேரத்தில் கிழிந்த உடையணிந்த முதியவர் ஒருவர் உணவு வேண்டி வருகிறார். பக்தரே அவரைத் துரத்தி விடுகிறார். பாலுக்கு அழும் ஏழைக்கைக்குழந்தையோடு பெண்ணொருவர் வருகிறார். அவரும் துரத்தப்படுகிறார். கைகால் இயலாத ஏழைப் பிச்சைக்காரர் ஒருவர் வருகிறார். பக்தர் அவரையும் துரத்திவிடுகிறார். கடைசிவரை காத்திருந்தும் கடவுள் வரவேயில்லை. ஏன் வரவில்லை என்று கேட்ட பக்தரிடம் அன்று இரவு கடவுள் அவரது கனவில் சொன்னாராம்: “மூன்றுமுறை மூன்று உருவங்களில் உன்னைத் தேடிவந்தேன். நீயோ என்னைக் கண்டுகொள்ளவேயில்லை.” 

இரண்டாம் வாசகத்தில் பேதுரு சொல்கிறார்: “உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிகாலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்”. வெளிப்படுத்தப்பட்ட இயேசுவை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் உணராமல் இருப்பதும்தான் பிரச்சினைக்குக் காரணம். கடவுள் ஒருபோதும் நேரடியாக நம் கண்களுக்குக் காட்சிதருவதில்லை. நம்மோடு வாழும் மனிதர்கள் வழியாக, நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கையின் வழியாக, நாம் நினைத்துப்பார்க்காத பல வழிகளில் கடவுள் நம்மைநோக்கி வந்துகொண்டேயிருக்கிறார். நமது பெற்றோரின் வழியாக நம்மை அன்புசெய்பவராக, நமது நண்பர்கள்வழியாக நம்மைத் தட்டிக்கொடுப்பவராக, நம் ஆசிரியர்கள் வழியாக நமக்குக் கற்றுத்தருபவராக, அருள்பணியாளர்கள், துறவியா வழியாக நம்மை ஆசீர்வதிப்பவராக, கடவுள் நம்மோடுதான் இருக்கிறார். நாம் அவரைக் கண்டுகொள்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுப்பார்ப்போம். 

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சகமனிதர்களில் கடவுளைக் கண்டுணராமல் இருப்பதுதான் இன்றைய சமுதயாத்தின் இழிநிலைக்குக் காரணம். தன் பெற்றோரில் கடவுளைக் கண்டுணரும் குழந்தைகள் பெற்றோருக்கு முழுமையாகக் கீழ்ப்படிவார்கள். எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை உணர்ந்து தங்கள் ஆசிரியர்களில் கடவுளைக் கண்டுணரும் மாணவர்கள் ஒழுக்கம்நிறைந்தவர்களாக இருப்பர். எல்லா மனிதர்களுமே கடவுளின் சாயல் என்றுணர்ந்து எல்லாரிலும் கடவுளைக் கண்டுணரும் சமூகத்தில் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது. இயற்கை இறைவனின் வாழிடம் என இயற்கையில் கடவுளைக் கண்டுணரும் மனிதன் இயற்கையை நேசிப்பவனாக இருப்பான். எனவே எல்லாரிலும் எல்லாவற்றிலும் கடவுளைக் கண்டுணர்வோம். 



Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)