பாஸ்கா காலம் - இரண்டாம் ஞாயிறு


இன்று இறைஇரக்கத்தின் பெருவிழா. நம் வாழ்வு முழுவதும் தனது அளவற்ற பேரன்பாலும் எல்லையற்ற இரக்கத்தாலும் நம்மை நிரப்பிவரும் இறைவனை நன்றியோடு நினைவுகூர்கின்ற நாள். இயேசுவின் உயிர்ப்பே இரக்கத்தின் அடையாளம்தான். இறப்புக்குப் பின்னும் இறைவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்குமாறு மறுவாழ்வு ஒன்று உண்டு என்பதை நாம்வாழத் தன்னை பலியாக்கிய இயேசு உலகிற்கு உணர்த்திய நாள். 

இன்றைய நற்செய்தியில் தன் உயிர்ப்பிற்குப் பிறகு தன் சீடர்களுக்குத் தோன்றும் இயேசு மூன்று பரிசுகளைத் தருவதைப் பார்க்கிறோம். முதல் பரிசு அமைதி (வா.19). கலகக்காரன் யாரை நமது வழியாக வழிகாட்டியாக ஏற்று வாழ்ந்தோமோ அந்தத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இனி நமது வாழ்வு என்னவாகும், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா? இனி எப்படி இந்த சமூகத்தில் வாழப்போகிறோம்? என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் சிக்கித் தவித்த சீடர்களுக்கு இயேசு தந்த முதல் பரிசு இது. இரண்டாவது பரிசு தூய ஆவியார் (வா.22). மக்களைக் குழப்புகிறவன் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டு இயேசு தண்டிக்கப்பட்டிருக்கிறார். நாமும் அவரோடு மூன்றாண்டுகள் பயணித்திருக்கிறோம். இதுதெரிந்தால் நம்மையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு மூடிய கதவுகளுக்குள் ஒளிந்துகொண்டிருந்தவர்களுக்கு தூய ஆவியும் அவர் அருளும் துணிவும் பரிசாகத் தரப்படுகின்றன. 

இவையிரண்டையும்விட முக்கியமானது மூன்றாவது பரிசு. அதுதான் நம்பிக்கை என்னும் பரிசு. கடந்த ஞாயிறு உயிர்ப்புப் பெருவிழாவின் நற்செய்தியில் வாசித்தோம்: “மூன்றுநாள்களுக்குப் பின் இயேசு ஒருவேளை உயிர்த்துவிடுவாரோ என்ற எண்ணம் பரிசேயர்களுக்குக்கூட இருந்தது.” ஆனால் அந்த நம்பிக்கை சீடர்களிடம் இல்லை. அவநம்பிக்கையில் விரக்தியில் அச்சத்தில் ஒளிந்திருந்த சீடர்களுக்கு இயேசுதந்த மூன்றாவது பரிசுதான் நம்பிக்கை. இயேசு உயிர்த்துவிட்டார் என்ற நம்பிக்கையைப் பெற்ற சீடர்கள் தங்கள் நம்பிக்கையை மிகத்தெளிவாக தோமாவிடம் அறிக்கையிடுகிறார்கள்: “நாங்கள் ஆண்டவரைக் கண்டோம்.” முதலில் நம்ப மறுக்கும் தோமாவுக்கும் எட்டுநாள்கள் கழித்து அதே பரிசை இயேசு தருகிறார்: “அய்யம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்று. நம்பிக்கைப் பரிசை பெற்றுக்கொண்ட தோமாவும் உடனே தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்: “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” (வா.28)

அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. தங்கள் எதிர்காலம் குறித்த கவலையோடு இருந்த சீடர்கள் உயிர்த்த இயேசுவின் இந்தக் காட்சிக்குப் பிறகு, முதலில் நம்புகிறார்கள், இரண்டாவது நம்பியதை அறிக்கையிடுகிறார்கள், மூன்றாவதாக தாங்கள் நம்பியதை, நம்பி அறிக்கையிட்டதை வாழ்ந்துகாட்டத் தொடங்குகிறார்கள். நம்பிக்கை கொண்;டோரின் வாழ்க்கைமுறை பற்றிய புனித லூக்காவின் பதிவுகள் திருத்தூதர் பணிகள் நூலில் தெளிவாக உள்ளன. ஒருவரோடு ஒருவர் நட்புறவில் வாழ்வதே சீடத்துவம் என நம்பிய அவர்கள் தங்கள் நம்பிக்கையை செயலில் காட்டத் தங்கள் உடைமைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். இறைவேண்டல்வழி இறைவனோடு இணைந்திருப்பதில் நம்பிக்கை வைத்த அவர்கள் தங்களுக்குள் ஒரே உள்ளமும் ஒரே மனமும் கொண்டவர்களாய் வாழ்ந்தார்கள். பாவம்தவிர மற்ற அனைத்திலும் நல்லவராகவே வாழ்ந்த ஒருவரைத் தங்கள் தலைவர் என நம்பிய அவர்கள் எல்லா மக்களின் நல்லெண்ணத்தையும் பெறும் அளவுக்குத் தாங்களும் நல்லவர்களாக வாழ்ந்தார்கள். கோயிலில் அப்பத்தையும் தெருக்களில் இறைவார்த்தையையும் வீடுகளில் அன்பையும் பகிர்ந்து கொண்டு தாங்கள் நம்பியதையெல்லாம் வாழ்ந்து காட்டிய ஒரு முன்மாதிரிச் சமூகமாக இருந்தார்கள் என்பதை வரலாறு வியப்போடு பதிவு செய்கின்றது. 

ஆம், நம்ப வேண்டும், நம்பியதை அறிக்கையிட வேண்டும், நம்பி அறிக்கையிட்டதை வாழ்ந்து காட்ட வேண்டும். சீடர்கள் நம்பினார்கள். நம்பியதைத் தங்கள் நண்பரான தோமாவிடம் அறிக்கையிட்டார்கள். நம்பி அறிக்கையிட்டதைத் தொடக்க காலக் கிறித்தவச் சமூகமாக வாழ்ந்து காட்டினார்கள். தோமா நம்பினார். நம்பியதைத் தன் தலைவர் இயேசு முன்னிலையில் அறிக்கையிட்டார். தான் நம்பி அறிக்கையிட்டதை நமது தமிழக மண்ணில் வாழ்ந்து காட்டி இந்தியாவின் திருத்தூதராக வரலாற்றில் நிலைத்து நிற்கின்றார்.

கிறித்தவ வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டியது இத்தகைய வாழ்வைத்தான். நமது வாழ்வில் நாம் நம்புகிறோமா? பலநேரங்களில் உயிர்த்த ஆண்டவரைக் காணாத சீடர்களைப்போல அவநம்பிக்கையோடு நமது வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கின்றோம். வாழ்வில் ஒருசிறு துன்பம் ஏற்பட்டால் போதும் ஒரேஒரு முறை நமது செபம் கேட்கப்படாமலிருந்தால் போதும் நமது எதிர்பார்ப்புகளுள் ஏதாவது ஒன்று நிறைவேறாமல் போனால் போதும் அவ்வளவு தான். ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது போல அவநம்பிக்கைக்குள் விரக்திக்குள் விழுந்து விடுகின்றோம். தினமும் கோயிலுக்கு வருகிறேன் தினமும் செபமாலை செபிக்கிறேன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தாங்க முடியாத சிலுவை என்றெல்லாம் ஏகத்துக்கும் பேசிக்கொண்டு நம்பிக்கையற்ற மனிதர்களாக மாறிவிடுகின்றோம். உண்மையில் இந்தக் கடவுள் என் துன்பங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? நான்படும் வேதனையைக் கண்டும் காணாததுபோல இருக்கும் இவர் கடவுள்தானா? என்றெல்லாம் கடவுளையே சந்தேகப்படவும் நாம் தயாராகி விடுகின்றோம். இப்படியெல்லாம் வாழும் நம்மைப் பார்த்து தான் இன்று ஆண்டவர் சொல்கிறார்: “மகனே, மகளே, அய்யம் தவிர்த்து நம்பிக்கை கொள்.” இன்றைய இரண்டாம் வாசகத்தில் பேதுரு கூறும் நம்பிக்கை வார்த்தைகள் நமக்குத்தான். “சிறிது காலம் நாம் சோதிக்கப்படலாம். பொன்னை நெருப்பு புடமிடுவதுபோல நமது நம்பிக்கையைத் துன்பங்கள் புடமிடலாம், ஆனால் ஒருநாள் வரும். அந்நாளில் ஒப்பற்ற மகிழ்ச்சியோடு பேருவகை கொள்வோம்.” அதுவரை நம்மிடம் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - அது நம்பிக்கை மட்டும்தான்.

சிலநேரங்களில் நாம் நம்புகிறோம். ஆனால் நம்பியதை அறிக்கையிடுவதற்கு முன்வருவதில்லை. மறைமுகமாக இருந்தாலும், இயேசு உயிர்த்துவிடுவோரா என்ற நம்பிக்கையை யூதர்கள்கூட பிலாத்துவிடம் அறிக்கையிடுகிறார்கள். ஆனால் தலைமைச் சீடர் பேதுரு ஒரு சாதாரண பணிப்பெண் முன்னிலையில் நம்பிக்கையை அறிக்கையிட முடியாதவராக இருந்தார். நமது வாழ்விலும் சிலநேரங்களில் இப்படி நடக்கலாம்.

ஒரு கத்தோலிக்க ஆலயத்திற்கு மிகஅருகில் ஒரு மதுபானக் கடை ஒன்று இருந்தது. கடையின் உரிமையாளர் ஒரு கடவுள் மறுப்பாளர். ஆலயத்திற்கு அருகில் இந்தக் கடை இருக்கக்கூடாது, இதை எடுத்து விடுங்கள் என்று எல்லாரும் அவரிடம் கேட்டார்கள். அவரோ மறுத்து விட்டார். உடனே எல்லாரும் சேர்ந்து அந்தக் கடையை அங்கிருந்து கடவுளே அகற்ற வேண்டும் என்று ஒருநாள் நோன்பிருந்து மன்றாடுகிறார்கள். அன்று இரவே கடும் மழை. அந்தக் கடையின்மீது பெரிய இடி ஒன்று விழுந்து கடை முழுவதுமாகக் காலியாகிவிடுகிறது. உடனே அந்தக் கடை உரிமையாளர் இந்தக் கிறித்தவர்கள் ஒன்றாகச் செபித்து என் கடையைக் காலிசெய்து விட்டார்கள். எனவே எனக்கு அவர்கள் இழப்பீடு தர வேண்டும் எனக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கின்றார். கிறித்தவர்களோ கடை அழிந்ததற்கும் எங்கள் செபத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வாதாடுகின்றார்கள். இறுதியாக அந்த நீதிபதி கேட்டாராம்: “கடவுள் இல்லை என்று சொல்லும் இவர் உங்கள் செபத்தை நம்புகிறார். கடவுளை ஏற்றுக்கொண்ட நீங்கள் உங்கள் செபத்தை நம்பாமல் பேசுகிறீர்களே. இது சரியா?” பலவேளைகளில் நாம் நம்புவதை அறிக்கையிட நாம் தயாராக இருப்பதில்லை என்பது எவ்வளவு வேதனையான உண்மை!

இன்னும் சிலநேரங்களில் நம்புகிறோம், அறிக்கையிடுகிறோம். ஆனால் நமது வாழ்வோ நம் நம்பிக்கைக்கு முற்றிலும் மாற்றான ஒரு வாழ்வாக இருக்கின்றது. ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு தன்னையே நமக்காகப் பகிர்ந்து தருகின்றார் என்பதை நம்புகிறோம், ஆனால் நமது தெருக்களில் நமது வீதிகளில் இரந்துண்ணும் ஏழைகளோடு ஒருவேளை உணவைப் பகிரவும் நாம் தயாராக இருப்பதில்லை. நம் கடவுள் நம் தந்தை என்று நம்புகிறோம். ஆனால் அவர் எல்லாருக்கும் தந்தையென்றால் எல்லாரும் சமம் நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதை வாழ்வில் காட்ட நாம் தயாராக இல்லை. இயேசு உலகம் தர முடியாத அமைதியைத் தந்தார் என்று நம்புகிறோம். ஆலயத்தில் மற்றவர்களோடு அந்த அமைதியை அறிக்கையிட்டுப் பகிர்கிறோம். ஆனால் நமது வீடுகளில் நமது உறவுகளில் நட்பு வட்டத்தில் அமைதியைக் குலைத்து சண்டைமூட்டுபவர்களாக இருக்கிறோம். 

நாம் நம்புவதற்கும், நம்பி அறிக்கையிடுவதற்கும் நாம் வாழ்கின்ற வாழ்விற்கும் பாரதூர இடைவெளி இருக்கின்றது. நம்பிக்கை வார்த்தையோடு நின்றுவிடுகிறது. வாழ்வில் கடைபிடிக்கப்படுவதில்லை. நாம் அறிக்கையிடும் அனைத்தும் சொல்லோடு முடிந்துவிட்டது நமது செயல் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கின்றது. மொத்தத்தில் நம்பிக்கை கொண்டோர் என்று அழைக்கப்படுவதற்குரிய அடையாளத்தை இழந்தவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திருஅவையின் தொடக்ககாலத்தில் ஒருவர் கிறித்தவர் என்பதற்கு அடையாளம் அவரது வாழ்வுதான். இன்று நாம் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் பிறமக்கள் இவர் கிறித்தவர் என்று சொல்லும் அளவிற்கு நமது வாழ்வு இருக்கிறதா என்று சிந்திப்போம். 

உயிர்த்த ஆண்டவர் தன் சீடர்களிடம் தன் காயங்களின் தழும்பை அடையாளமாகக் காட்டினார். நாளை இறுதித் தீர்ப்பின்போது “மகனே, உனக்காக நான் இறந்தேன் என்பதற்கு இந்தக் காயங்கள்தான் அடையாளங்கள். எனக்காக நீ வாழ்ந்தாய் என்பதற்கான அடையாளம் என்ன?” என்று அதே ஆண்டவர் கேட்பார். அப்போது நம்பிக்கையை வெளிப்படுத்திய வாழ்வை அடையாளமாக நம்மால் காட்ட முடியுமா? 

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)