எனக்கு அரசியல் தேவையா? (Do I need Politics?)
கிராமப்புறங்களில் அமைந்துள்ள தெருவோர தேநீர்க்கடைகளில் இவ்வாறு எழுதிப் போட்டிருப்பாhகள்: இங்கு அரசியல் பேசாதீர்! இந்த அறிவிப்புப் பலகையைப் பார்க்கும் எனக்கு நிச்சயம் வியப்பும் ஆச்சரியமும் ஏற்படும். இன்று அரசியல் பேசாமல் இருக்க முடியுமா? அரசியல். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனோடும், குழுமத்தோடும், சமூகத்தோடும் இரண்டறக் கலந்து விட்ட ஒரு சொல். இன்றைய எதார்த்த உலகில் இது இல்லாமல் எதுவும் இல்லை என்னும் பட்டத்தை ஏதேனும் ஒன்றிற்குக் கொடுக்க வேண்டுமென்றால் அதை அரசியலுக்குக் கொடுக்கலாம். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்ற முதுமொழிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்று முன்னுக்கு வந்து முதன்மையாக நிற்பது இந்த அரசியல் தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு மனிதன் செய்யும் அனைத்து செயல்களிலும் அரசியல் இருக்கின்றது. அவன் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் அரசியல் இருக்கின்றது. முன்னரே சொன்னது போல, அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. யாரும் இல்லை.
இது ஒருபக்கம் இருப்பினும், பல நேரங்களில் பலர் என்னைப் பார்த்து உனக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்பும் போதெல்லாம் எனக்கும் இப்படித்தான் தோன்றும்: அரசியல் இல்லாமல் என்னால் இருக்க முடியுமா? என்னால் மட்டுமல்ல, எந்தவொரு மனிதனாலும் இருக்க முடியாது என்பதுதான் எனது முடிவு. உண்ணும் உணவு தொடங்கி, உடுக்கும் உடை, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று வரை எங்கும் எதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கின்றது. எந்தவொரு மனிதனும், குழுவும், சமுதாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. சிந்தனையாளர் அரிசுடாட்டில் சொல்வது போல, மனிதன் ஒரு சமூக விலங்கு. ஒரு சமூகத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு உண்டு. நான் என்னிலே முழுமை பெற்றவன். எனக்கு யாருடைய தேவையும் இல்லை. எனவே, நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. ஆக, சமூகத்தில் வாழ்கின்ற மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ சமூகத்தின் அரசியலுக்குள்ளும் வந்து விடுகிறான். ஒருவன் இல்லறவாசியானாலும், துறவறநிலையினராலும் சரி, அரசியல் என்ற மாபெரும் பேரியக்கத்தின் உறுப்பினராகவே அவரும் இருக்கின்றார் என்பது மறுக்கவியலாத உண்மை.
எனக்கும் அரசியலுக்கும் காதல் ஏற்பட்ட கதை அப்படியொன்றும் சுவாரசியமானது அல்ல. பள்ளிப்பருவத்திலேயே எனக்கும் அரசியலுக்கும் அப்படியொரு பிணைப்பு. இயல்பிலேயே தமிழ் என்றால் தன்னை மறந்து விடும் குணம் கொண்டவன் நான். என் குடும்பத்திலோ, முன்னோர் வரலாற்றிலோ யாரும் தமிழ்ப்பண்டிதர்களாகவோ, தமிழ் இலக்கியத்தில் பாண்டித்துவம் பெற்றவர்களாகவோ இல்லை. எனது தாய்வழித் தாத்தா எழுதுவதிலும், பேசுவதிலும் நாடகங்கள் இயற்றி நடிப்பதிலும் கைதேர்ந்தவர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நான் பிறக்கும் முன்னரே அவர் இறந்து விட்டதால் அவருடன் எனக்கு நேரடித் தொடர்பேதும் இல்லை. என்றாலும் ஏனோ எனக்கு தமிழ்த்தாயின் மீது தனிப்பெரும் காதல். மணிக்கணக்கில் தமிழ்க்கவிதைகளையும், இலக்கியங்களையும் படித்துச் சுவைப்பதில் அளவில்லா ஆனந்தம். என் பள்ளிப்பருவத்தில் மற்ற மாணவர்கள் எல்லாம் தேர்வுக்காக கடவுள் வாழ்த்தையும் மனப்பாடச் செய்யுளையும் மனனம் செய்து கொண்டிருந்த போது நான் மட்டும் ஏனோ கண்ணதாசன் கவிதைகளிலும், கலைஞரின் உரைநடையிலும் என்னையே சிறைப்படுத்திக் கொண்டேன். அதில் கண்ணதாசனை விட என்னை அதிகம் கவர்ந்தவர் கலைஞர்.
கலைஞரின் கவிதைகளைப் புத்தகங்களிலும், அவரது அறிக்கைகள், பேச்சுக்களை அன்றாட செய்தித்தாள்களிலும் படித்துப் படித்துப் பைத்தியமாய் அலைந்த நாட்கள் அவை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கலைஞரின் பேச்சுக்களை வானொலியில் கேட்க ஆரம்பித்தேன். அவரது பேச்சுக்களில் தெறித்து விழுந்த அரசியல் பாடங்கள் என் உள்ளத்தில் உட்கார ஆரம்பித்தன. என் அரசியல் பாடத்தின் ஆரம்ப பாடசாலையாக இருந்தது கலைஞரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தான். கலைஞரில் தொடங்கிய என் பயணம் அண்ணா, பெரியார் என திராவிடத் தலைவர்கள்பால் செல்லத் தொடங்கியது. எம்.ஜி.ஆர். என்றாலோ, ஜெயலலிதா என்றாலோ யார் என்று கூட எனக்குத் தெரியாத அந்தக் காலத்திலேயே அண்ணாவும், பெரியாரும் என்னில் ஆழமாகச் செல்லத் தொடங்கியிருந்தார்கள். நான் அண்ணாவை அறிந்ததும், பெரியாரைப் புரிந்ததும் கலைஞர் வழியாகத் தான். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் என்னில் குடிகொள்ள ஆரம்பித்தது. தி.மு.க. ஈர்ப்பு அதிகமாகவே என்னில் தெரிந்தது. அதே காலக்கட்டத்தில் வைகோவின் பேச்சு ஒன்றை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழ்த்தாய் நர்த்தனமாடும் அவரது அழகுத் தமிழ்ப்பேச்சில் சொக்கிப்போன பலருள் நானும் ஒருவனானேன். இப்படித்தான், தமிழ் மொழி ஆர்வம் என்னை தமிழக அரசியல் ஆர்வத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தது.
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவுக்காக பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளை தி.மு.க. நடத்தியது. அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான் அப்போதெல்லாம் பள்ளிக்கல்வித்துறை நடத்தி வந்த கலை, இலக்கியப் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொள்வதுண்டு. பள்ளி, வட்டம், மண்;டலம், கல்வி மாவட்டம், மாவட்டம் என ஒவ்வொரு நிலையிலும் போட்டிகள் நடைபெறும். அண்ணா நூற்றாண்டு விழா போட்டிகளிலும் அதே எண்ணத்துடன் தான் கலந்து கொண்டேன். பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளுக்கு என் பெயர் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடர்ந்து சேலம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு, அப்போதைய தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடமிருந்து பரிசு பெற்றேன். போட்டிகள் பெரும்பாலும் பெரியார், அண்ணா, கலைஞர், தமிழக அரசியல் சார்ந்தே இருந்தமையால் தயாரிப்பு நேரத்தில் அவை குறித்து ஆழாக வாசித்தேன். விளைவு, அரசியல் என்னுள் ஆழமாக வேர்விடத் தொடங்கியது. தொடர்ந்து என் பேச்சு, வாசிப்பு, எழுத்து, சிந்தனை அனைத்திலும் அரசியலுக்கும் தனியிடம் கொடுக்கத் தொடங்கினேன்.
கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற போது இன்னும் அதிகமாக அரசியலை வாசித்தேன். அரசியல் கூட்டங்களுக்குச் செல்வதையும், தலைவர்களின் பேச்சக்களைக் கேட்பதையும் நேசித்தேன். இப்போது, திமு.க. தவிர்த்த மற்ற கட்சிகளையும், மற்ற தலைவர்களையும் பற்றி புரியத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்திய, உலக அரசியலிலும் வளர ஆரம்பித்தேன். வெறுமனே ஒருதலைப்பட்சமான தி.மு.க ஆதரளவானாகவும், கலைஞரின் இரசிகனாகவும் மட்டுமே இருந்த நான், சமரசமில்லா விமர்சகனாக, அரசியல் பார்வையாளனாக மாறினேன். தூய பவுல் அருள்பணிப் பயிற்சியகத்தில் பயின்ற மெய்யியல் இப்போதும் என் அரசியல் ஆர்வத்திற்குத் தொடர்ந்து தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று நானும் அரசியலும் பங்காளிகளாகி விட்டோம். திரைக்கு முன்னும் பின்னும் அரசியல்வாதிகள் செய்யும் தில்லுமுல்லுகளையும் தகிடுதத்தங்களையும் புரிந்து கொள்கிறேன். அரசியலையும் அதன் அடிநாதத்தையும் உற்றுநோக்கும் ஆராய்ச்சி மாணவனாய் என் பயணம் தொடர்கின்றது.
என்னைப் பொறுத்தவரை, எனக்கு மட்டுமல்ல, தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த அரசியல் தேடல் இருந்தாக வேண்டும். மற்றெல்லா நாட்டவரையும் இனத்தவரையும் விட, இந்த அரசியல் ஆதிக்கத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருப்பவன் தமிழன் தான். தன் உரிமைகளை, உடைமைகளை, உணர்வுகளை இழந்து, உயிருள்ள பிணமாக அலைந்து கொண்டிருக்கும் தமிழன் அரசியல் அரிச்சுவடி பயில ஆரம்பிக்கும் போது தான் தன்னை உணர முடியும். அரசியல் வரலாற்றை அறிய முற்படும் போது தான் தன் முன்னோர் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டாhகள் என்பதையும், தன் வாழ்வில் இந்த அரசியல் எந்த அளவிற்கு விளையாடியிருக்கின்றது என்பதையும் அவனால் புரிய முடியும். உலகின் முதல் இனமாய், மூத்த இனமாய்ப் பிறந்து, மூவுலகையும் கொடிகட்டி ஆண்ட தமிழன் பரம்பரை இன்று பிறரிடம் மண்டியிட்டு, மானங்கெட்டு அலையும் எதார்த்தத்தை அவனால் அறிய முடியும்.
சரி, அரசியல் அவசியமானது தான். ஒரு வாதத்திற்காக சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால், நான் ஒரு ஆன்மீகவாதி தானே. அருள்பணிப் பயிற்சி நிலையிலிருக்கும் நான் வழிபாடுகளையும், விவிலியத்தையும், இறையியலையும் பற்றித் தானே சிந்திக்க வேண்டும். அரசியலைப் பேசுவதற்கு என்ன அவசியம் வந்து விட்டது?
நிச்சயம் நான் ஆன்மீகவாதி என்பதும், அருள்பணிப் பயிற்சி நிலை மாணவன் என்பதும் பொய் கலக்காத உண்மை தான். ஆனாலும் அரசியலைப் பற்றி நான் பேசுவது அவசியமான ஒன்று. உண்மையில், நான் அருள்பணிப் பயிற்சி நிலையில் இருப்பதாலே மற்றெல்லாரையும் விட அரசியல் எனக்க அவசியமான ஒன்றாகி விடுகிறது. ஓர் அருள்பணியாளன் என்பவன் இயேசுவின் சீடன். உடன் உழைப்பாளன். இயேசுவின் வழியில் செல்வதும், அவர் வாழ்ந்து காட்டிய பாதையைப் பின்பற்றுவதும் தானே அவனது பணி. இன்று அருள்பணிப் பயிற்சியகங்களிலும், கோயில்களிலும் இதைத்தானே சொல்லிக் கொடுக்கிறார்கள். அப்படியென்றால் மிகப்பெரும் அரசியல்வாதியான இயேசுவின் சீடனும் அரசியல் பேசுபவனாகத் தானே இருந்தாக வேண்டும். என்ன இயேசு அரசியல்வாதியா? நிச்சயமாக.
இயேசு என்ற மிகப்பெரிய ஆளுமை இன்று எல்லாராலும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அவரை வழிபாடுகளிலும் விவிலியத்திலும் செபப்புத்தகங்களிலும் எளிதாக சுருக்கி விடுகின்றோம். ஆனால் வரலாற்றில் வாழ்ந்த இயேசு உண்மையில் இந்த வட்டங்களுக்குள் சுருங்கி விடுபவரல்ல. அவர் ஒரு போராளி. தான் வாழ்ந்த சமுதாயத்தில் இருந்த அவலங்களை எதிர்த்துப் போராடிய ஒரு போராளி. அன்றைய எதேச்சதிகார ஆட்சியாளர்களிடமிருந்து மக்கள் விடுதலை பெற வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுத்து, மக்களை ஒன்று திரட்டிய ஒரு கலகக்காரன். அன்றைய ஆட்சியாளர்களின் தவறுகளை பகிரங்கமாக பொதுவெளிகளில் எடுத்துக்கூறி அதனால் அவர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்ட ஒரு சமரசமில்லா அரசியல் விமர்சகன். அதற்காகவே கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்ட ஒரு வீரன். இதுதான் வரலாற்றில் வாழ்ந்த இயேசு என்ற மனிதனின் ஆளுமை.
இந்தப் புரிதல் இன்று பலருக்கு இல்லை என்பது வேதனை. வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு இப்படிப்பட்ட புரிதல்கள் ஓரளவுக்கு மக்களிடம் ஏற்பட்டாலும் இன்னும் அது எல்லாத் தளங்களையும் சென்றடையவில்லையே என்பது ஆதங்கமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் இறப்பைக் கொண்டாடும் நாம், அது வெறும் இறப்பு அல்ல, திட்டமிட்ட கொலை என்பதை மறந்து விடுகிறோம். இயேசு கற்றுத் தந்த அமைதியையும் அன்பையும் மட்டுமே சிந்திக்கும் நாம், அந்த அமைதியை எல்லாரும் பெறுவதற்காக தீ மூட்டவே தான் வந்ததாகச் சொன்ன இயேசுவைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. வெளிவேடக்காரர்கள், குருட்டு வழிகாட்டிகள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்றெல்லாம் அன்றைய ஆட்சியாளர்களைக் குறித்து இயேசு முன்வைத்த விமர்சனங்களையெல்லாம் நாம் கண்டுகொள்வதேயில்லை.
சரி, இயேசுவை விட்டு விடுவோம். அவருக்குப் பிறகு அதே இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்தார்களே, அவர்களைப் பற்றியாவது பேசுகிறோமா? இல்லையே. இயேசுவின் காலத்திலும், அதற்குக் கொஞ்சம் பிறகும் கிறித்தவம் நிறுவனமயமாக்கப்பட்ட மதமாக உருவெடுக்கவில்லையே. அந்தியோக்கியாவில் கிறித்தவர்கள் என்ற பெயர் முதலில் கொடுக்கப்படும் வரை இயேசுவின் போதனை புதிய நெறி என்றும், அதைப் பின்பற்றுபவர்கள் புதிய நெறியாளர்கள் என்றும் தானே பெயர்கள் இருந்தன. எல்லாரும் தங்கள் சொத்துக்களை விற்று, திருத்தூதர்களிடம் கொடுத்து, அதை எல்லாருக்கும் சமமாகப் பிரித்துக் கொண்டார்களே. “அங்கு தேவையில் உழல்வோர் என்று யாரும் காணப்படவில்லை” என்று வரலாறு வியந்து சொல்கிறதே. காரல் மார்க்சுக்கு பல காலங்களுக்கு முன்பே பொதுவுடைமை பேசி, அதை வாழ்ந்தும் காட்டிய உலகின் முதல் பொதுவுடைமை சமூகம் தானே கிறித்தவம். அதை அன்றைக்கே மக்களிடம் ஒழுங்காகக் கொண்டு சென்றிருந்தால் இன்று உலகில் முக்கால் பங்கு இருக்கும் கிறித்தவம் மிகப்பெரும் பொதுவுடைமைச் சமூகமாக மாறியிருக்குமே. மார்க்ஸ் என்று ஒருவர் பிறந்து, ஆராய்ந்து, அதன் பிறகு மூலதனம், பொதுவுடைமை அறிக்கை என்றெல்லாம் எழுதவும், பல்வேறு பெயர்களில் பொதுவுடைமைக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தோன்றவும் தேவையே இருந்திருக்காதே. செய்யத் தவறியது யார்?
சரி, நடந்ததை மறந்து விடுவோம். இனியாவது தவறுகளைத் திருத்திக்கொள்ள வரலாறு நமக்கு வாய்ப்புத் தருகிறது. அதையும் விட்டு விட்டு, இன்னும் அரசியல் தேவையில்லை, அரசியலும் ஆன்மீகமும் வௌ;வேறானவை என்றே நாம் பேசிக்கொண்டிருந்தால், இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை – எப்போது தான் திருந்தப் போகிறோம்?
Comments
Post a Comment