ஜனநாயகம் விற்பனைக்கு! (Democracy for Sales)
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தலைவர்களின் பெருமையையும், அவர்களது கட்சிகளின் தன்மைகளையும் தியாகம், தன்னலமில்லா உழைப்பு, மக்கள் பணி போன்ற அளவுகோல்களைக் கொண்டு கணக்கிட்ட காலம் மலையேறி விட்டது. இன்று அரசியல்வாதிகள் என்றாலே அவர்களின் மதிப்பை பணபலமும், அவர்கள் சார்ந்துள்ள சாதிபலமும், வைத்திருக்கம் அடியாள் பலமும், வகிக்கும் பதவிபலமும் தான் முடிவு செய்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றேன், நாட்டிற்கு நல்லது செய்தேன், மக்களுக்காகப் போராடினேன், சிறை சென்றேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு யாரும் அரசியலில் இன்று நுழைய முடியாது. அப்படியே நுழைந்தாலும் மக்களின் வரவேற்பு இருக்காது. ஒருவேளை மக்களின் ஆதரவு இருந்தாலும் ஆகப்பெரும் கட்சிகளோடும், பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த, சாணக்கியத்தனமிக்க அரசியல்வாதிகளோடு போராடி, தேர்தலிலோ, அரசியலிலோ வெற்றி பெற முடியாது. இதுதான் இன்றைய இந்தியாவின் எழுதப்படாத விதி.
பணம், பணம், பணம் தான், பணம் மட்டும் தான் இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. தமிழ்நாட்டின் தனிப்பெரும் கட்சியாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை இந்திய அளவில் பிரபலமாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவைத் தொடாந்து, அவரது கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களும், உண்மைத் தொண்டர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளும் இந்தியாவில் வேறெந்தக் கட்சிக்கும் வந்திருக்குமா என்றால் கேள்விக்குறியே. சசிகலாவின் தலைமையை எற்க மறுத்து, மெரினாவில் ஜெயலலிதா சமாதிக்கு முன் தியானம் செய்து, கட்சியை உடைத்தார், அப்போதைய முதல்வர் பன்னீர் செல்வம். அவருக்குப் பயந்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டதும், தமிழக அரசியல் ஜனநாயகத்தைப் பார்த்து உலகமே கைகொட்டிச் சிரித்ததும், பழம்பெருமை பேசியே காலத்தை ஓட்டிப் பழகிவிட்ட தமிழர்களின் பெருமை, மானம் எல்லாம் கப்பல் ஏறியதும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்திருக்க முடியாத உண்மைகள்.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு நிலைமை காந்தி பிறந்த மண்ணுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் பாச.க.வுக்கு இரண்டு இடங்களும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கும் அளவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கின்றது. அமித் ஷா,....................................... ஆகிய பா.ச.க வேட்பாளர்களும், காங்கிரசின் சார்பில் அகமது படேலும் களம் இறக்கப்பட்ட வரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை. அப்போது தான் அமித் ஷாவின் கைங்கரியம் ஆரம்பமானது. திடீரென்று, எதிர்க்கட்சித் தலைவராயிருந்த காங்கிரஸ் உறுப்பினர் கட்சியிலிருந்து விலகியதும், அதனைத் தொடர்ந்து ஆறு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியதும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பதை உணர்த்தியது. சொல்லி வைத்தது போலவே, உடனடியாக பாச.க.வும் தனது மூன்றாவது வேட்பாளராக காங்கிரசிலிருந்து வெளியேறிய ....................................வை களமிறக்கிய போது தான் தனக்கு ஆபத்து வரப்போவதை காங்கிரஸ் கட்சி உணர ஆரம்பித்தது. உடனடியாக, மீதமிருக்கும் 44 உறுப்பினர்களை ஏற்றிக் கொண்டு கர்நாடகம் விரைகிறது விமானம். அங்கிருந்து உடனடியாக அவர்கள் பெங்களுர் கொண்டு செல்லப்பட்டு, ஈகிள் கார்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர். விதவிதமான உணவு வகைகள், நீச்சல் குளம் என கூவத்தூர் பாணியில் அனைத்தும் அரங்கேறுகின்றன. இது ஜனநாயகக் கொலை என பாச.க.வும், பா.ச.க.வின் சதியிலிருந்து கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றவே இவ்வாறு செய்வதாக காங்கிரசும் ஆளுக்கொரு விளக்கம் தருகின்றார்கள். உலகின் ஆகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள நிலையை நினைக்கும்போது சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியாவின் அரசியல் ஆலோசகராக விளங்கும் அகமது படேல் வெற்றி பெறாமல் தடுப்பதற்காக நரேந்திர மோடியும் அமித் ஷாவும் செய்த சதியின் விளைவே இந்த நாடகங்கள் என்பது தெரிய வந்த போது வருங்கால இந்தியாவை நினைத்து சற்று அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுவதை மறுக்க முடியவி;ல்லை. தங்களின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் பிரதிநிதிகளை பணத்துக்கு விலைக்கு வாங்கும் இப்பழக்கம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத இயல்பாக மாறிவிட்டது வேதனைக்குரியது. ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும், தங்களுக்குப் பிடித்தவரை ஆட்சிக்கு வரவைக்க முடியும், தங்களுக்குப் பிடிக்காதவரை வெற்றி வாய்ப்பிலிருந்து தடுக்க முடியும் என்றால், இந்திய அரசியலில் பாமர மக்களின் பாத்திரம் என்ன? மக்களின் ஓட்டிற்கும், மனசாட்சியின் குரலுக்கும் மதிப்பு என்ன? இந்தச் சீரழிவிலிருந்து இந்தியாவையும், இந்தியர்களையும் காப்பாற்ற முடியாத அளவிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலுவிழந்து போய்விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.
அதே வேளையில், மக்கள் பணியாற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கும் பதவிக்கும் விலைபோய்க் கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தால், பதவிக்காக அணிமாறும் துரோகத்தைப் பார்க்கும் போது அவர்கள் தங்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களின் நம்பகத்தன்மையை இழந்து விட்டார்கள் என்ற முடிவுக்கே வர முடிகின்றது.
ஏறத்தாழ இதே நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தபோதே நாம் சுதாரித்திருக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் போட்டியில் சசிகலாவிற்கும் பன்னீர் செல்வத்திற்கும் நடந்த அரசியல் விளையாட்டை நாடே அறியும். ஒரு வாரத்திற்கு முன்பு, சசிகலாவை பொதுச்செயலாளராக முன்மொழிந்ததும், அதுவரை ஜெயலலிதாவிற்குக் கொடுத்து வந்த காலில் விழும் மரியாதையை சசிகலாவிற்கும் கொடுக்கும் தவறான முன்னுதாரணத்தை தொடங்கி வைத்ததும் இதே பன்னீர்செல்வம் தானே என்பது மெரினாவில் அவர் ஆவேசத்துடன் பேட்டியளிக்கும் போது நினைவுக்கு வராமலில்லை. அதே நேரத்தில், தனது ஆதரவாளர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு போய்விடக் கூடாது என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கூட தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு கூவத்தூரில் சிறை வைத்ததும், விரளயாட்டுப் பொம்மைகளைக் காட்டி கைக்குழந்தைகளின் அழுகையை அடக்குவது போல, அறுசுவை உணவையும், அனைத்து சொகுசு வசதிகளையும் காட்டி, சட்டமன்ற உறுப்பினர்களின் மனதை மாற்ற முயன்றதும் இந்திய ஜனநாயகத்தின் நம்பகத் தன்மைக்கு ஆகப்பெரும் சவாலாகவே இருந்தது. சசிகலா சிறை சென்று, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியேற்ற பிறகு, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் அலைபேசி உரையாடல் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பாகி, இரு அணியினரும் நடத்திய குதிரை பேரத்தை உலகறியச் செய்த போது, தமிழகம் உலக அளவில் தலைகுனிந்தது. குஜராத்தில் நடைபெற்ற காட்சிகளுக்கும் இதற்கும் இடத்தைத் தவிர வேறெதிலும் வித்தியாசமில்லை.
உலகின் மிகப்பெரும் மக்களாட்சி நாடு என்றும், உலகின் மிகப்பெரிய, தலைசிறந்த அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்ட நாடு என்றும் நம்மை நாமே பாராட்டிக் கொண்டிருப்பதால் எந்த பயனும் விளைந்து விடப் போவதில்லை. பழங்கதை பேசியே பழக்கப்பட்டுப் போன நாம் புதுவரலாறு படைக்கும் நேரம் வந்து விட்டது.
Comments
Post a Comment