அன்பின் மகிழ்வை அதிகமாக்குவோம்!

அன்பின் மகிழ்வை அதிகமாக்குவோம்!

மனிதன் ஒரு சமூக விலங்கு. பிற விலங்குகளைப் போலன்றி, மனிதன் என்பவன் எப்போதும் குழுமமாகவும், சமூகமாகவும் கூடி வாழும் இயல்பினை உடையவன். எனவே தான், விலங்குகளின் கூட்டத்தையோ அல்லது இனத்தையோ சமூகம் என்று அழைக்காத நாம், மனிதர்களின் கூட்டத்தை அல்லது குழுமத்தை மட்டும் சமூகம் என்றே அடையாளம் காண்கின்றோம். இப்படிப்பட்ட மனித சமூகங்கள் அனைத்துமே சிறு சிறு சமூகங்களின் ஒன்றிணைப்பே. இத்தகு சிறு சமூகங்களுள் முதன்மையான, முகாமையான, இன்றியமையாத கூறு யாதெனில், அது ஒரு குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். இந்த மாபெரும் உண்மையை உணர்ந்து தான், நமது கத்தோலிக்கத் திருச்சபை “குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை” எனப் பெருமிதம் பொங்கக் கூறுகின்றது. 
இவ்வாறு சமூகங்கள் அனைத்திற்கும்  அடிப்படைக் கூறுகளாகத் திகழ வேண்டிய குடும்பங்களின் இன்றைய நிலை கவலைக்குரியதாகவே உள்ளது. குடும்பம் என்ற உன்னத அமைப்பின் அடையாளம் இன்றைய யதார்த்த உலகத்தைப் பொறுத்தமட்டில் முழுக்க முழுக்க பொருளிழந்து விட்டது என்பது தான் மறுக்கவியலாத உண்மை. எனவே, இன்றைய காலக்கட்டத்தில், சமுதாயத்தைச் சீர்படுத்த விரும்பும் எந்தவொரு மனிதரும், அதன் அடிப்படையான குடும்பத்தைச் சீர்படுத்துவதே சரியான புரிதலாக இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தமது அன்பின் மகிழ்ச்சி (யுஅழசளை டுயநவவையை) என்னும் திருத்தூது ஊக்கவுரையின் மூலம் பாழ்பட்டுள்ள குடும்பங்களைப் பண்படுத்த மனித குலம் முழுமைக்கும் சிறப்பாக, அருள்பணி நிலையினருக்கும் அழைப்பு விடுக்கின்றார்.
பொதுவாக, அருள்பணி நிலையினரும் சரி, அருள்பணி நிலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நாமும் சரி, குடும்பங்களின் மீதும், அவற்றின் போக்கின் மீதும் அக்கறையற்ற தன்மையில் தான் உள்ளோம். ஏதோ, குடும்பங்களை விட்டு மணத்துறவு பூண்டுள்ள நமக்கும் குடும்பங்களுக்கும் தொடர்பே இல்லாதது போன்ற உணர்வில் தான் நாம் பலவேளைகளில் இருக்கின்றோம். ஆனால், வருங்காலங்களில் பங்குகள், நிறுவனங்கள் எனப் பலவற்றை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்க வேண்டிய நாம், குடும்பங்களையும், அவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் அறிய முற்படுவதே அறிவுடைமை.
கத்தோலிக்கத் திருஅவையைப் பொறுத்தமட்டில், குடும்பம் என்பது திருமணம் என்னும் அருளடையாளத்தின் மூலம் ஒன்றிணைக்கப்படும் அல்லது உருவாக்கப்படும் ஒரு அமைப்பு. ஆணும் பெண்ணும் தங்கள் அன்பை ஒருவர் மற்றொருவருடன் பரிமாறிக் கொள்ளவும், குழந்தைகளைப் பெற்று அவர்களை இறைநம்பிக்கையில் வளர்த்தெடுக்கவும் துணைபுரியும் அடிப்படையான அங்கம். ஆன்மிகப் பார்வையில் மட்டுமல்லாது, சமூகப் பார்வையிலும் இக்கூற்று முற்றிலும் உண்மையான ஒன்று. என்னதான் குழந்தைகள் பள்ளியில் பண்புகளைக் கற்றுக் கொண்டாலும், மறைக்கல்வியில் மதிப்பீடுகளைக் கற்றுக் கொண்டாலும், தங்கள் குடும்பத்தில் பட்டறிவு வாயிலாக பெறுகின்ற பண்பொழுக்கத்தை வேறெங்கும் கற்றுக் கொள்ள முடியாது என்பதே எதார்த்தம். எனவே, அக்கழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுத்தரும் முதற்பாடசாலையாக இருப்பது குடும்பம் மட்டுமே. அதற்கேற்ற முறையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான நன்மைத்தனத்தைத் தங்கள் முன்மாதிரியான வாழ்வின் மூலம் கற்றுத்தர வேண்டியது மிகவும் அவசியம். 
ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும் உண்டு, மனக்கவலையும் உண்டு. “போரில் ஆபத்து அதிகமாக இருப்பது போலவே, வெற்றிக்கான மகிழ்வும் அதிகமாக இருக்கும்” என்ற தூய அகுஸ்தினாரின் வார்த்தைகள் குடும்பங்களுக்கும் முற்றிலும் பொருந்தக் கூடியனவாகவே உள்ளன (அ.ம. 130). இருந்தபோதிலும், இத்தகு பிரச்சினைகளால் ஏற்படும் மனக்கசப்புகளையும் அவற்றால் ஏற்படும் கவலைகளையும் தூர எறிந்து விட்டு, அன்பையும் அதனால் ஏற்படும் மகிழ்வையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே திருத்தந்தை தமது திருத்தூது ஊக்கவுரையின் மூலம் உரக்கச் சொல்லும் பாடம். 
இத்தகு அன்பின்  மகிழ்ச்சி இன்றைய குடும்பங்களில் அதிகமாக வேண்டுமெனில், ஏற்கனவே சொன்னது போல, இதில் அருள்பணி நிலையினரின் பங்கு இன்றியமையாத ஒன்று. இன்று பல்வேறு குடும்பங்கள் உறவுச் சிக்கல்கள் மற்றும் காயங்களால் துன்புற்றுத் தவிக்கும் போது, அவற்றிற்கு மருந்திட்டு, குணமாக்க வேண்டியது அருள்பணி நிலையினரின் கடமை. இவ்வுயரிய நிலைக்குப் பயிற்சி பெறும் நாம், நாம் பணியாற்றும் இடங்களிலும் நிறுவனங்களிலும் உள்ள அனைத்துக் குழுமங்களும் “குடும்பங்களின் குடும்பங்களே” என்பதை உணர வேண்டும் (அ.ம. 202). பாவக் காயங்களால் பரிதவிப்போரின் காயங்களைத் தமது பரிவிரக்கத்தால் கட்டும் இறைத்தந்தையைப் போல, உறவுக் காயங்களைக் குணமாக்கும் வழிகளைக் காண விழைய வேண்டும். தவறிப்போன ஆடுகளையும் தோளில் தூக்கிச் சுமக்கும் நல்லாயரான நம் தலைவர் இயேசுவின் வழியில், பிரிந்து கிடக்கும் குடும்பங்களை கூட்டிச் சேர்க்க முயல வேண்டும். அன்பின் அக்கினியால் ஆழ்மனதைச் சுடும் ஆவியாரின் துணையோடு, நம் அன்பான அணுகுமுறையால் அனைவரையும் அரவணைக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான், நாமும் நம் திருத்தந்தையின் மற்றும் திருஅவையின் கனவை நனவாக்கிடும் வகையில் அன்பின் மகிழ்ச்சியை அதிகப்படுத்துபவர்களாகத் திகழ முடியும்.
வாருங்கள்! அன்னைத் திருஅவையின் வழியில்
அன்பின் மகிழ்வை அதிகமாக்குவோம்!!

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)