பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!! (A reading of the Book of Ruth in the Bible)


அது சாலமோன் அரசன் தாவீதுக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை ஆண்டு கொண்டிருந்த காலம். யூதர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதி பிற இனத்தவரைப் புழுவென மதித்த காலம். தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய மக்களினம் என்றும், தங்களோடு வாழும் ஏனைய இனத்தார் யாருமே கடவுளுக்கு ஏற்றவர்களல்ல என்றும் எண்ணிக் கொண்டிருந்த காலம். இஸ்ரயேல் மக்களிலும் கூட பெண்கள் ஆண்களை விட மதிப்பில் குறைந்தவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட காலம். இந்தக்காலத்தில் தான் இஸ்ரயேல் மக்களுக்குத் தங்கள் திருச்சட்டத்தையும் மூதாதையர் வரலாற்றையும் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இறைவனும் மனிதனும் இணைந்து ஆசிரியர்களாகச் செயல்பட்டாலும் கூட, அக்கால மக்களின் ஆணாதிக்கச் சிந்தனைகள் இத்திருநூல்களிலும் இழையோட ஆரம்பித்தன. 
பெண்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் எதுவும் மருந்துக்குக் கூட இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் தான் திருவிவிலியம் எழுதப்பட்டது என்றாலும் கூட, அரிதிலும் அரிதாக ஒருசில பெண்கள் அக்காலத்தவரால் சிறந்தவர்கள் எனக் கருதப்பட்டதும், அவர்களின் திருநூல்களில் தங்களுக்கென்று தனிச்சிறப்பான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதும் மறுக்கவியலாத உண்மை. அத்தகு பெண்மணிகளுள் வீரமகளிர் மூவர் தங்கள் பெயரில் தனிநூல் எழுதப்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அவர்கள் தான் ரூத்து, யூதித்து மற்றும் எஸ்தர் ஆகியோர்.
இத்தகு தனிச்சிறப்பு வாய்ந்த ரூத்து நூல் அடிப்படையில் நகோமி, ரூத்து என்னும் இரு பெண்களைக் கதை நாயகியராகக் கொண்டு எழுதப்பட்டது. கணவனையும் இரு மகன்களையும் புகுந்த வீட்டில் இழந்து, தன் மருமகள்கள் இருவரோடு தன் எஞ்சிய வாழ்வைக் கழிக்கத் தீர்மானித்து விட்ட ஓர் அபலைப் பெண் தான் நம் நகோமி. தன்னைப் போலவே தன் மருமகள்கள் துன்புற்று விடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தன் மருமகளாகிய ஓர்பாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு தந்தை வீட்டிற்கு அனுப்பி விட, மற்றொரு மருமகள் ரூத்துவோ அவரது வற்புறுத்தலையும் மீறி நகோமியுடன் வசிக்கத் தீர்மானிக்கிறார். தன் வீட்டில் வாழ்க்கைப்பட்ட பாவத்திற்காக தன் கணவனின் மறைவுக்குப் பிறகு இன்னொரு வாழ்க்கையைத் தேடாமல், தன்னையே தாயாக ஏற்றுக் கொண்டு, தியாக வாழ்வு வாழும் அவருக்கென ஒரு பதிய வாழ்வை ஏற்படுத்தித் தருகிறார், நகோமி. அப்புதிய வாழ்வின் மூலம் ரூத்து ஆண்டவர் இயேசுவின் வழிமரபில் மூதாதையாக விளங்கும் வாய்ப்பைப் பெறுகிநார். ரூத்து நூலின் ஆகச்சிறிய கதைச்சுருக்கம் இதுதான்.
அளவில் மிகச்சிறிய நூலாக இருந்தாலும், ரூத்து நூல் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம். பாடங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்நூல் செய்யும் புரட்சிகளும் அதிகம். பெண்ணுரிமை மிகவும் தீவிரமாகப் பேசப்பட்டு வரும் இக்காலத்திலேயே பெண்கள் இன்னும் நம்மில் பலரால் இரண்டாந்தரக் குடிமக்களாகவே கருதப்பட்டு வரும் நிலையில், பெண்களின் உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்டு வந்த அந்தக் காலத்தில் ஒரு பெண்ணைக் காவியத் தலைவியாக்கியதே முதல் புரட்சி. மாமியாரும் மருமகளும் எலியும் பூனையும், கீரியும் பாம்புமாக மாறிக் கொண்டிருக்கும் வழக்கம் விட்டொழித்து, கணவனையும் மகன்களையும் இழந்த மாமியாரைத் தன் தாயாக ஏற்றுக்கொண்ட மருமகளின் வாழ்வு மற்றொரு புரட்சி. தன் மகனை மணம் செய்துகொண்ட மருமகள் கைம்பெண்ணாய் நிற்கும் நிலை கண்டு ஒரு மாமியார் தன் மருமகளுக்கு மறுமணம் செய்து வைக்க நினைத்து, அதற்கு செயல்வடிவம் கொடுப்பது இன்னொரு புரட்சி. இப்படி பல புரட்சிகள் இந்நூலில் இருந்தாலும், இந்நூல் சுட்டிக்காட்டும் ஆழமான கருத்தும் ஒன்று உண்டு. கடவுள் தம் அடியார்க்கு சோதனைகள் வந்நதாலும், அருகிருந்து வழிநடத்துவார் என்பதே அச்சிந்தனை. 
இவ்வாறு பல்வேறு சிந்தனைகளின் கதம்பக் கொத்தாகத் திகழ்ந்திடும் ரூத்து நூல் இக்காலத்தில் வாழும் நம்முன் பல சவால்களை முன்வைக்கின்றது. அது வைக்கும் சவால்கள் அனைத்திலும் தலையாயது பெண்ணுரிமைச் சிந்தனையே. இன்றைய எதார்த்த உலகில் பெண்கள் போகப்பொருள்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் ஆண்களை விட, பெண்கள் முன்னேறியே வந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புக்கள் எப்போதும் மறுக்கப்பட்டே வருகின்றன. குறிப்பாக அரசியல் தளத்தில் பெண்களின் நிலை விடையில்லா வினாவாகவே இன்றும் தொடர்கின்றது. தேர்தல் வந்தாலே பெண்ணுரிமை பற்றி வாய்கிழியப் பேசும் நம் அரசியல்வாதிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததும் தங்கள் பேச்சை தாங்களே மறந்து விடுவது ஒரு வேதனையான முரண். தற்காலத்தில் வலுவாகக் குரல்கொடுக்கப்பட்டாலும், உப்புச்சப்பில்லாத சாக்குப்போக்குகள் கூறி புறக்கணிக்கப்பட்டு வரும் மகளிர்க்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு ஒன்றே இதற்கு தௌ;ளிய உதாரணம். வானளாவிய அதிகாரத்தோடு ஒரு பெண் ஆட்சிப்பீடத்தில் கோலோச்சிய நம் தமிழ்நாட்டில் இன்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களில் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் என்று எண்ணிப்பார்த்தாலே அரசியல்வாதிகளின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வந்து விடும்.
அதற்காக, அரசியல்வாதிகளை மட்டும் குறைசொல்வதில் நியாயம் இல்லை. நமது சமுதாயமும் இதே கருத்தோட்டத்தில் தான் இருக்கின்றது. மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் நம் சமூகம், கணவனை இழந்த மனைவி மறுமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த சுணக்கம் காட்டத்தான் செய்கின்றது. மனைவியை இழந்த ஆணுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தாத நாம், கணவனை இழந்த பெண்ணை மட்டும் அமங்கல நிலையில் எளிதாக அமர்த்தி விடுகின்றோம். தன் குழந்தைப்பருவம் முதலே பொட்டு வைத்துப் பூச்சூடி மகிழ்ந்த ஒரு பெண் கணவனை இழந்ததும் அவையனைத்தையுமே துறக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? கணவனின் அடையாளம் தான் தாலி என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் கூட, கணவன் இறந்ததும் தாலியை மட்டும் துறப்பது தானே நியாயம்? எல்லா நகைகளையும் துறந்து, ஆடையின் நிறத்தைக் கூட மாற்றச் சொல்லும் நாம் உண்மையிலேயே நாகரீகமுள்ள மனிதர்கள் தானா என்று நம்மையே நாம் கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். 
வற்றாத வளங்களும் குறையாத செழுமையும் கொண்ட நம் மொழியில் கைம்பெண், வாழாவெட்டி, மலடி, முதிர்கன்னி, விபச்சாரி, விலைமகள் என்னும் பெண்பால் சொற்களுக்கு நிகரான ஆண்பால் சொற்கள் கூட இல்லை என்பது விந்தையாக இல்லையா? பெண்ணாகப் பிறந்து விட்டாலே ஒருசில தியாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும் என்றும் அடம்பிடிக்கும் நம் சமுதாய வழக்கங்கள் அபத்தமாகத் தோன்றவில்லையா? எவ்வளவோ பண்பாட்டு முதிர்ச்சி பெற்று விட்ட இக்காலத்திலும் தொடரும் பாலியல் வன்முறைகளும், வரதட்சணைக் கொடுமைகளும் நமக்கு எதை உணர்த்துகின்றன? வருங்காலத் தலைமுறைக்கு நம் பண்பாட்டின் எச்சங்களாக நாம் இவற்றைத் தான் விட்டுச் செல்லப் போகின்றோமா? சிந்திப்போம்.
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று வாய்கிழிய வார்த்தைகளால் முழங்கி விட்டு, வாழ்வில் அந்த வார்த்தைகளுக்கு இடம்கொடுக்காமல் நாம் தொடர்ந்து வாழ்ந்து வந்தால் நம் புனித நூலின் பகுதியான ரூத்து நூல் தரும் பாடத்தை உணரவில்லை என்றும், நம் புனித நூலை நாம் இன்னும் மதிக்கவில்லை என்றும் தான் பொருள்கொள்ள வேண்டியிருக்கும். பல்லாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் ரூத்து போன்ற காப்பியங்களை வடித்த கிறித்தவ மரபில் வந்த நாம் இனியாவது உணரவும் சிந்திக்கவும்; செயல்படுத்தவும் தொடங்குவோமா?

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)