தனிநபர் வழிபாடும் தள்ளாடும் தமிழ்நாடும் (Hero Worship in Tamil Nadu Politics)


இந்திய, குறிப்பாக தமிழக அரசியலில் தனிநபர் வழிபாட்டிற்கு எப்போதும் பெரும் இடமுண்டு. ஆள்பவன் என்றாலே ஆண்டவன் என்று நினைக்கும் மனநிலை நம் மக்களின் பொதுப்புத்தியில் நங்கூரமிட்டு உட்கார்ந்திருக்கிறது. அது அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, திரைத்துறை, அரசுத்துறை என எல்லா இடங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றது என்றாலும், அரசியல் தளத்தில் அதன் ஆழமும் அகலமும் சற்றே அதிகம் தான். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திற்கு முன்பே இச்சீரழிவு இருக்கின்றது என்பது கசப்பான உண்மை. மன்னர் காலத்தில் மன்னர்களைப் பாடுவது, போற்றுவது, வழிபடுவது என்றிருந்த நிலை முடியாட்சி ஒழிந்து குடியாட்சி பிறந்த பிறகும் ஒழியவில்லை. 
பூம்புகார் படத்திலே ஒரு வசனம் வரும். தன் கணவன் கோவலன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் கண்ணகி பாண்டிய மன்னனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் அவனுக்கு இல்லை என்றும் வாதிடுகிறாள். பின்னர் அமர்ந்திருக்கும் சான்றோர் பெருமக்களிடம் தன் வழக்கை எடுத்துரைக்கும் கண்ணகி, தன் வாதத்தின் இறுதியில் சொல்லும் வார்த்தைகள் அவை: “ஆன்றோர்களே, அருமைமிகு அளப்பரிய படை கொண்டவன் பாண்டியன் என்பதற்காக நீதியின் பாதையை வளைக்காமல், ஆரியப் படை கடந்தான், அவனியெல்லாம் புகழ் பெற்றான் என்ற கீர்த்தித் திரையால் அவன் செய்த குற்றத்தை மறைத்து விடாமல் தாய்மேல் ஆணையாக, தமிழ்மேல் ஆணையாக, தாயகத்து மக்கள்மேல் ஆணையாக தீர்ப்புக் கூறுங்கள், நல்லதொரு தீர்ப்புக் கூறுங்கள்”. ஆனால் நடைமுறையில் ஒருவர் தலைவர் என்பதற்காக, சில நல்ல திட்டங்களை வகுத்தார் என்பதற்காக அவரது இருண்ட பக்கங்களை எளிதாக மறந்து விடுவதும், மறைத்து விடுவதும், தவறி யாராவது அவரது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் வெகுண்டெழுவதும் அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற விபரீத எண்ணத்தின் விளைவுகளே.
பலவேளைகளில் நம்மிடம் இருக்கும் பிரச்சினை நாம் செய்வது தனிநபர் வழிபாடு என்பதை நாமே தெரியாமல் இருப்பது தான். “தலைவா, நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையே எனக்குப் போதும்” என்று சுவரொட்டிகள் பளிச்சிடுவதும், “வாழ்த்த வயதின்றி வணங்க மட்டுமே” முடியும் தொண்டர்கள் இங்கு பலர் இருப்பதும் தனிநபர் வழிபாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறும் ஆதாரங்கள். தான் வரிந்து கொண்ட தலைவரின் பெயரைச் சொல்வது கூட மிகப்பெரிய தவறு என்ற எண்ணம் தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய எல்லாக் கட்சிகளிலும் நிறைந்திருக்கின்றது. இதய தெய்வம், வாழும் வள்ளுவர், எங்கள் வீட்டுப் பிள்ளை, தமிழின் தலைமகன் என எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டங்களையும் தலைவர்களுக்கே கொடுத்து விட்டுத் தங்களை முரட்டு பக்தர்களாகவே அடையாளம் காட்டிக் கொள்ளும் தொண்டர்கள் தமிழகத்தில் அதிகம். பெயருக்கு ஒரு செயற்குழுவைக் கூட்டுவதும், அங்கே தீர்மானம் என்ற பெயரில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தலைவரிடமே விடுவதும், இடம், பொருள், ஏவல் பாராமல் கட்சித் தலைவர்களின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுவதும் இங்கு இயல்பாக நடக்கும் நிகழ்வுகளாக மாறியது மிகப்பெரும் வேதனை.
மேலைநாடுகளில் அதிபர், பிரதமர் தொடங்கி கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களுக்கும் அவர்களது பெயர், வகிக்கும் பதவி இவற்றைத் தாண்டி வேறெந்த அடைமொழியும் இருப்பதில்லை. பொதுவெளிகளிலும், சட்டமியற்றும் அவைகளிலும் கூட மிஸ்டர் பிரசிடெண்ட், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்வதை அவர்களது சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இங்கு, மாண்புமிகு என்ற விகுதி இல்லாமல் சட்டப்பேரவைத் தலைவரையோ, முதல்வரையோ, எதிர்க்கட்சித் தலைவரையோ, அமைச்சர்களையோ, மற்ற உறுப்பினர்களையோ அழைத்து விட்டால் அது அவை விதிகளுக்கும் மரபுக்கும் முரண்பட்டதாம். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தங்களின் பிள்ளைகளின் வயதை ஒத்தவராகவே இருந்தாலும், இரண்டாம் நிலைத் தலைவர்கள் அவர்களை அம்மா, அய்யா, அண்ணன் என்று தான் அழைத்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தலைவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் எதைச் செய்தாலும் அதைச் சரியென்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஊடகத்தினர் நேர்காணல் செய்யும் போதும், தொலைக்காட்சி விவாதங்களின் போதும் தங்களால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குத் தங்கள் தலைவருக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டும். இதுதான் இன்றைய எதார்த்த அரசியல்.
தங்கள் தலைவர் விமானத்தில் பறப்பதை எளிதாக ஏற்றுக்கொள்ளும் தொண்டர்களால், அதே தலைவர் தொடர்வண்டியில் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. உடனே, “பாருங்கள், எங்கள் தலைவரின் எளிமையை” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு புளகாங்கிதம் அடைகின்றோம். அண்மையில், ஒரு திரைப்பட துணை நடிகர் உச்ச நடிகர் ஒருவரின் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது “அவர் ரொம்ப சிம்பிளா என் தோள்மேல கைபோட்டுப் பேசினார், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களாட சேர்ந்து உக்கார்ந்து சாப்பிட்டார்” என்றெல்லாம் பாராட்டிக்கொண்டே போனார். தோள்மீது கைபோடுவதும், மற்றவர்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதும் கூட எளிமையின் அடையாளங்களாக மாறிப்போகும் அளவுக்கு பொதுவெளியில் இருந்து தலைவர்களை அந்நியப்படுத்தி உயர்த்திப் பார்க்கின்றோம் நாம். அதனால்தான் காந்தியின் அரைநிர்வாணத்தை எளிமை என்று ஏற்றுக்கொள்ளும் நம்மால், நம் பக்கத்து வீட்டுக்காரன் அரைநிர்வாண நிலையில் இருப்பதை எளிமை என எண்ண முடிவதில்லை.
இன்று மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னரே இந்திய அரசியலின் நிலைமை இதுதான். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மொத்த குத்தகையையும் காந்திக்கே கொடுத்து விடும் நாம் உண்மையில் போராடிய மற்ற ஆளுமைகளைப் புறந்தள்ளியது கூட காந்தி மீது கொண்டிருந்த தனிநபர் வழிபாட்டு மோகம் தான். தான் சொல்வதன் மீது வேறு யாருக்கம் எந்த மாற்றுக் கருத்தும் இருந்து விடக்கூடாது என்பதில் காந்தியை விடவும் மற்றவர்கள் மிகத்தெளிவாக இருந்தனர். அதனால்தான் காந்தியின் தேர்வான பட்டாபி சீதாராமைய்யர் காங்கிரஸ் கட்சித் தேர்தலில் தோற்று சுபாஷ் சந்திரபோஸ் வெற்றி பெற்ற போது அதைக் காந்தியாலும் ஏற்க முடியவில்லை, மற்றவர்களாலும் ஏற்க முடியவில்லை. விளைவு, காந்தியின் உண்ணாவிரதத்தில் தொடங்கி நேதாஜியின் பதவி விலகலில் முடிந்தது. காந்தியை ஏதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக நேதாஜி வரலாற்றின் பக்கங்களிலிருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டார். ஆனால் அவர் எதற்காக காந்தியை எதிர்க்கத் துணிந்தார், அவரது கருத்தில் நியாயம் இருந்ததா என்பது பற்றியெல்லாம் யாரும் சிந்திக்கவில்லை, சிந்திக்கத் தேவையும் அவர்களுக்கு ஏற்படவில்லை. காந்தி சொன்னால் சொன்னது தான். அவ்வளவுதான். 
நேதாஜிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் அம்பேத்கருக்கும் ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக சாதியை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்த அவரால் சாதியையும், அதற்குக் காரணமாக இருந்த வருணப் பிரிவையும், அதனை வலியுறுத்திய வேதங்களையும், இவற்றிற்கு சப்பைக்கட்டு கட்டிய காந்தியையும் ஏற்க முடியவில்லை. அவரால் காந்தியை ஏற்க முடியாததால், காங்கிரசால் அவரையே ஏற்க முடியவில்லை. ஓரு கட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அம்பேத்கர் கேட்ட இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையைக் கூட எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, காந்தியின் உயிருக்காக அவரே தன் கோரிக்கையை சமரசம் செய்ய வேண்டிய கேவலம் இதே நாட்டில் ஏற்பட்டது. பூனா ஒப்பந்தம் கையெழுத்தான போது “இலட்சக்கணக்கான மக்கள் அறியாமையால் கடவுளாகக் கருதும் காந்தியின் உயிரைக் காப்பாற்ற மனிதநேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அம்முடிவை எடுத்ததாக” அவரே குறிப்பிட்டார்.
தனிநபர் வழிபாட்டின் விளைவாக அமைந்த அந்த துயர நிகழ்வு அவர் உள்ளத்தை வருத்திக் கொண்டே இருந்ததால்தான், 25.11.1949இல் தாம் வரைந்த அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவினை வழங்கும்போது, எதிர்காலத்தில் இந்நாட்டுக்கு நேரக்கூடிய மூன்று அபாயங்கள் என தனிநபர் வழிபாடு, வேலை நிறுத்தம், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இந்த மூன்றிலும் தனிநபர் வழிபாட்டால் நேரக் கூடிய சீரழிவுகளை வற்புறுத்திச் சொன்னார். “எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவர் காலடியின் கீழ் உங்கள் சுதந்திரங்களை அடகு வைப்பீர்களேயானால், அவர் அடுத்த நாளே சர்வாதிகாரியாகிவிடுவார்” என்ற மெய்யிலாளர் ஜான் ஸ்டூவர்ட் மில்லின் வார்த்தைகளையும், “தனிநபர் வழிபாடு மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில்தான் ஓங்கி நிற்கிறது. இந்தியர்களே, ஆண்டவனை நோக்கி நீங்கள் ஆராதனை செய்தால், அது உங்களுக்கு ஈடேற்றத்தைத் தரும். அரசியல்வாதிகளைப் போற்றி புகழ்ந்தால், அது அவர்களை எதேச்சாதிகாரி ஆக்கிவிடும்” என்ற டேனியல் ஓ கன்னலின் மேற்கோள் காட்டி முன்னெச்சரிக்கை செய்தார்.
ஆனால், காந்தி மீது கொண்ட மயக்கத்தால் அம்பேத்கரையே மறந்து விட்ட நம்மால், அவரது எச்சரிக்கையை மட்டும் நினைவில் கொள்ள முடியுமா என்ன? இன்றளவும் தனிநபர் வழிபாட்டை நாம் இறுக்கப் பிடித்துக் கொண்டுள்ளோம்.
தகுதி வாய்ந்த தலைவர்கள் தனிநபர் வழிபாட்டுக்கு மயங்குவதில்லை. ஆவடி காங்கிரஸ் மாநாடு முடிந்தவுடன், காமராசர் தலைமையில் காரைக்குடியில் ஒரு கூட்டம் நிகழ்ந்தது. தொடக்கத்தில் பேசவந்த பேச்சாளர் ஒருவர், காமராசரை “இந்திரனே, சந்திரனே” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி வருணித்தபோது, காமராசர் அவரைத் தடுத்து நிறுத்தி, “என்னவே, நான் வந்து அரைமணி ஆச்சுன்னேன். நாகபுரி காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சோஷலிச தீர்மானத்தைப் பற்றிப் பேசுன்னேன், தெரிஞ்சா பேசு, என்னப் பத்தித்தான் இங்குள்ள எல்லோருக்கும் தெரியும்னேன், சப்ஜெக்ட்டுக்கு வான்னேன்” என்று தனிநபர் வழிபாட்டில் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவரே விரும்பாத தனிநபர் வழிபாட்டை நாம் அவருக்கே கொடுப்பதுதான்.
பெரும் கல்விப் புரட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தார், அணைகளைக் கட்டினார், ஏழைகளுக்கான ஆட்சியை அறிமுகம் செய்தார் என்றெல்லாம் காமராசரைப் போற்றும் நம்மால், அவர் ஏற்றுக்கொண்ட தேசியத்தின் பெயரால் இந்தித் திணிப்பை மென்மையாகக் கையாண்டதையும், சமூக நீதி பேசிய திராவிட இயக்கத்தை முடிந்தவரை நசுக்கியதையும், “தமிழ்நாடு” பெயர் மாற்றக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும், தனக்கு ஆட்சியைக் கொடுத்த மக்களை விட வாய்ப்பைக் கொடுத்த கட்சியே பெரிதென்று பதவியைத் துறந்து கட்சியை வளர்த்ததையும் விமர்சிக்க முடிவதில்லை.
ஓரளவுக்கேனும் பெரியாரின் சமூக நீதிக் கனவை அண்ணாவின் வழியில் நடைமுறைப் படுத்தியதாலும், இயல், இசை, நாடகம் என தமிழின் முத்துறைகளிலும் சிறந்து விளங்கியதாலும் கருணாநிதியை “முத்தமிழ் வித்தகர்” என்று ஏற்றுக்கொள்ளும் நம்மால், அவரது காலத்தில் கட்சி குடும்பத்தின் சொத்தாக மாறிப் போனதையும், பார்ப்பண ஆதிக்கத்தை எதிர்த்த அதே தலைவர் ஆண்டை சாதி அரசியலுக்குக் கால்கோள் இட்டதையும், பதவிக்காக அவர் செய்த அரசியல் சித்து விளையாட்டுக்களையும் விமர்சிக்க முடியவில்லை.
திரைப்படங்களில் மக்கள் நாயகனாக வலம்வந்து, தன் வெள்ளித்திரை பிம்பத்தால் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆரை “பொன்மனச் செம்மல்” என்று புகழும் நம்மால், அந்தப் பொன்மனச் செம்மலின் ஆட்சியில் ஊழல் கரைபுரண்டோடியதையும், சாராய வியாபாரிகள் எல்லாம் கல்வி வள்ளல்களாக அவதாரம் எடுத்ததையும், ஆகப்பெரும் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியை நடத்தியதையும், ஒற்றை முட்டையைப் போட்டு விட்டு, காமராசரின் மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டமாக அவர் மாற்றியதையும் விமர்சிக்க முடிவதில்லை.
பார்வைக்கு எளியவர், பழகுதற்கு இனியவர், மக்கள் மனங்கவர்ந்த குடியரசுத் தலைவர், அணு, அறிவியல், வானியல் போன்ற பல துறைகளில் சிறந்தோங்கியவர், இளைஞர்கள், குழந்தைகளுக்கெல்லாம் வழிகாட்டி என்று அப்துல் கலாமைப் பாராட்டும் நம்மால், வழிபாட்டு முறையால் இசுலாமியராக இருந்தும் இந்துத்துவத்திற்கு சாமரம் வீசியவராக அவர் இருந்ததையும், கூடன்குளம் விவகாரத்தில் அவர் எடுத்த மக்கள் விரோத நிலைப்பாட்டையும், அவரது காலத்தில் கருணை மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர் வாளாவிருந்ததையும் விமர்சிக்க முடியவில்லை.
இவையத்தனைக்கும் காரணம் ஒன்று தான். அதுதான் தனிநபர் வழிபாடு. தலைவர்கள் மீது நாம் கொண்ட அதீத கவர்ச்சி, மோகம். ஜூனியர் விகடன் இதழின் கீழ்க்கண்ட வரிகள் தனிநபர் வழிபாட்டின் ஒன்றுமில்லாமையையும், தலைவர்கள் வலிமையானவர்கள்  என்ற ஒரே காரணத்தால் எதுவும் நடந்து விடாது என்பதையும் படம்பிடித்துக் காட்டுகின்றன:
“இந்தியாவின் முதல் பிரதமரின் வியத்தகு ஆளுமையும் நிர்வாகத்திறனும், 1962 சீனப் போரைத் தடுத்துவிடவில்லை. எமர்ஜென்சி பிரகனடம் செய்ய முடிந்த ஒரே வலிமையான பெண் பிரதமரான இந்திரா காந்தியால், “கரீபி ஹட்டாவ்...” (வறுமையை ஒழிப்போம்) என்றுதான் முழங்கமுடிந்தது. ஏழைகளைத்தான் அகற்றமுடிந்தது, ஏழைமையை அல்ல. அவருடைய மகனான ராஜீவ் காந்தியின் வசீகரத்தை ஃபோபர்ஸ் கபளீகரம் செய்தது. இந்தி பேசாத மாநிலத்திலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தந்தை என்று புகழப்பட்ட நரசிம்ம ராவின் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
புகழ்பெற்ற இந்தி கவிஞரும், மென்போக்கு கொண்ட இந்துத்துவர் என்று அழைக்கப்பட்டவருமான வாஜ்பாயால் நாடாளுமன்றத் தாக்குதலையோ, கார்கில் போரையோ தவிர்க்க முடியவில்லை. தன் ஆட்சிக்காலத்தில்,  தன் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் ஆளும் மாநிலத்தில் அரங்கேறிய குஜராத் 2002 கலவரங்களை,  குறைந்தபட்சம் கண்டிக்கக்கூட அவருக்கு வார்த்தைகள் கிட்டவில்லை. பின்னர் முஸ்லிம்களைக் கட்டுக்குள் கொண்டு வந்தவராகக் கருதப்பட்ட நரேந்திர மோடியின் மதியூகத்தையும், புஜபலத்தையும் மீறி இன்று பதான்கோட் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும், அடுக்கடுக்காக ஊழல்கள் நிகழ்ந்தாலும் தன்னளவில் நேர்மையானவர் என்று அவருடைய அரசியல் எதிரிகளாலும் கருதப்படுபவரால் நாட்டை அல்ல, தன் கட்சியையேகூட கடுகளவும் மாற்றமுடியவில்லை என்பதே நிஜம்!
இந்த வரிசையில் இன்னொரு பரபர உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே ஆரம்பித்துவைத்த மாபெரும் போராட்டத்தையும், அதற்கு ஆதரவு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்திய ஒரு பெரும் நடுத்தர வர்க்க கூட்டத்தையும் தனக்குச் சாதகமாகத் திருப்பிக்கொண்டு, டெல்லியில் பெரும் வெற்றி பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். அதை ஆம் ஆத்மியின் வெற்றியாக ஊடகம் கொண்டாடித் தீர்த்தது. மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் இளைஞர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் போன்றவர்களுக்கு கெஜ்ரிவால் ஒரு வெற்றிகரமான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் உறுதியான சாதனை என்று எதுவொன்றையும் டெல்லியில் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. தனது வெற்றிக்குப் பிறகு கெஜ்ரிவால் பலமுறை செய்தி வெளிச்சத்தில் தென்பட்டார். ஆனால் ஒருமுறைகூட நல்ல காரணத்துக்காக அல்ல. மோடி, கெஜ்ரிவால் இருவரும் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூன்கள் என்பதை மீடியாவும், மக்களும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தெரிந்துகொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டது”.
56 இன்ச் மார்பளவு கொண்டவர் என்ற ஒரே காரணத்தால் மோடியால் அப்படி ஒன்றும் சாதித்து விட முடியவில்லை என்ற ஒரே ஒரு உதாரணம் போதும், தனிநபர் வழிபாட்டின் சீர்கேட்டைத் தெளிவுபடுத்த. ஆனால், எத்தனை உதாரணங்கள் வந்தாலும் நாம் சோர்ந்து விடுவதில்லை. இன்னும் வழிபாட்டிற்கான தலைவர்களைத் தேடிக்கொண்டே இருக்கின்றோம். அது சீமானோ, சகாயமோ, ரஜினிகாந்தோ, கமலஹாசனோ பிரச்சினையில்லை. நமக்கு வழிபட ஒரு ஆள் வேண்டும். அவ்வளவு தான். அப்படியென்றால் நமக்கு என்ன தான் வேண்டும்? பதில் மிகவும் சிறியதுதான். கருத்தியல்.
தலைவர்கள் வரலாற்றை உருவாக்குவதில்லை. அவர்களது கருத்தியல்கள் தான் வரலாற்றை உருவாக்கும். தலைவர்களைத் தேடுவதைவிட நல்ல கருத்தியல்களை, சித்தாந்தங்களைத் தேட வேண்டும். தலைவர்கள் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு, அவர்களது எல்லா நிலைப்பாடுகளையும் ஆதரிப்பதையும் விட்டுவிட்டு, நமக்கென்று ஒரு சரியான கருத்தியலை உருவாக்கி, அதற்குள் நம் தலைவர்களைக் கொண்டு வர வேண்டும். பெரியார் சொன்னது போல ‘‘ஒரு தலைவர் சொல்வது சரியா, தவறா என்று சிந்தித்துப் பார்த்துச் சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்’’ பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படும்போது நம்முடைய தேவை தலைவர்கள் அல்ல, தத்துவங்கள் தான் என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)