பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!! (A reading of the Book of Ruth in the Bible)
அது சாலமோன் அரசன் தாவீதுக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை ஆண்டு கொண்டிருந்த காலம். யூதர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதி பிற இனத்தவரைப் புழுவென மதித்த காலம். தாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய மக்களினம் என்றும், தங்களோடு வாழும் ஏனைய இனத்தார் யாருமே கடவுளுக்கு ஏற்றவர்களல்ல என்றும் எண்ணிக் கொண்டிருந்த காலம். இஸ்ரயேல் மக்களிலும் கூட பெண்கள் ஆண்களை விட மதிப்பில் குறைந்தவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட காலம். இந்தக்காலத்தில் தான் இஸ்ரயேல் மக்களுக்குத் தங்கள் திருச்சட்டத்தையும் மூதாதையர் வரலாற்றையும் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இறைவனும் மனிதனும் இணைந்து ஆசிரியர்களாகச் செயல்பட்டாலும் கூட, அக்கால மக்களின் ஆணாதிக்கச் சிந்தனைகள் இத்திருநூல்களிலும் இழையோட ஆரம்பித்தன. பெண்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் எதுவும் மருந்துக்குக் கூட இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் தான் திருவிவிலியம் எழுதப்பட்டது என்றாலும் கூட, அரிதிலும் அரிதாக ஒருசில பெண்கள் அக்காலத்தவரால் சிறந்தவர்கள் எனக் கருதப்பட்டதும், அவர்களின் திருநூல்களில் தங்களுக்கென்று தனிச்சிறப்பான இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட