Liturgy and Life

வாழ்வே வழிபாடாக…
“ச்சே… என்னப்பா இந்தச் சாமியாரு…தினமும் ஒரே செபத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டு இருக்காரு. இத்தன வருஷம் படிச்சும் ஒழுங்கா செபம் பண்ணத் தெரியலையே. ஆனா அந்த பாஸ்டரு எவ்ளோ அழகா செபம் பண்றாரு!” – தாய்த்திரு அவை தன் பாரம்பரியத்தில் சிக்குண்டுக் கிடப்பதாகக் கருதும் ஒரு சிலரின் வாதம் இது.
     “அடக் கொடுமையே! இந்தக் காலத்து சாமியாருங்க எல்லாம் என்ன பூசை வைக்கிறாங்க? அந்தக் காலத்து லத்தீன் பூசை இருக்கே. அதோட மகிமையை தனி”. – திருஅவை தன் பாரம்பரியத்தை இழந்துவிட்டதாக எண்ணும் வெகுசிலரின் வாதம் இது.
     ஆராய்ந்து பார்க்கின், இவ்விரு கூற்றுகளுக்கும் அடிப்படையானதாக அமைவது இவர்கள் வாழ்வையும், வழிபாட்டையும் பிரித்துப் பார்ப்பதுதான் என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியும். வழிபாடு என்பது வெறும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே என எண்ணி, வாழ்விற்கும் வழிபாட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என எண்ணுவது உண்மையிலேயே தவறான ஒரு சித்தாந்தம் ஆகும். நமது வழிபாடுகள் அனைத்துமே நமது வாழ்வைத் தொடக் கூடியனவாக, நம் தான்மையை(சுயத்தை)த் தாக்குவனாவக, சொல்லளவில் உணர்த்தும் இறையாட்சி விழுமியங்களை வாழ்வாக்கத் தூண்டுவனவாக அமையும்போது மட்டுமே வாழ்வு வழிபாடாகவும், வழிபாடு வாழ்வாகவும் மாற்றம் பெறும். எனவே, இதன் முழுப்பொருள் தெரியாதவர்கள் வழிபாட்டின் மூலப்பொருளையாவது அறிய முற்படுவது ஓரளவேனும் நலம் பயக்கும்.
     திருவழிபாடு என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தை “டுவைரசபல” கிரேக்க வார்த்தையான “டுநவைரசழள” என்னும் மூலச்சொல்லிலிருந்து உருவானது. (டுயழள-மக்கள்; ருசபழள-பணி) முதலில் இம்மூல வார்த்தையானது அரசு அதிகாரிகள் மக்களுக்குச் செய்துவரும் சேவை  அல்லது பணியை மட்டுமே குறித்தது. நாளடைவில் திருச்சபை அதிகாரிகள் மக்களுக்கு ஆற்றிய ஆன்மிகப் பணியையும் இது குறித்துக் காட்டியது. எனவேதான், திருவழிபாட்டை நிறைவேற்றும் குருவை “திருப்பணியாளர்” அல்லது “இறைபணியாளர்” என்றும் வழங்குகிறோம்.
     நம் திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனையின்படி, திருவழிபாடு என்பது திருப்பலி, அருள் அடையாளங்கள்(திருவருட்சாதனங்கள்) மற்றும் திருப்புகழ் மாலை (கட்டளை செபம்) ஆகிய மூன்று கூறுகளை மட்டுமே உள்ளடக்கியது. இவை தவிர நாம் செய்யும் இறைநன்மைத் தொழுகை(நற்கருணை ஆராதனை), திருச்செபமாலை உள்ளிட்ட அனைத்தும் நமது பக்திமுயற்சிகளே ஆகும். இத்தகு பக்தி முயற்சிகளுக்கும், திருவழிபாட்டிற்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி அல்லது வேறுபாடு உண்டு. பக்தி முயற்சிகள் என்பவை நமது ஆன்மிக வாழ்விற்கு உரமூட்டுவனவாக, மனிதம் புனிதமாக வழிகோலும் கருவிகளாக மட்டுமே அமையும். ஆனால், திருவழிபாடு என்பது நமது ஆன்மிக வாழ்விற்கு மட்டுமன்று, அடையாள வாழ்விற்கும் வழிகாட்டும். மனிதமும் இறைமையும் இணைகின்ற இடமே வழிபாடு. இதை உணர்ந்தே, திருத்தந்தை தூய இரண்டாம் அருள் சின்னப்பர்(சான் பால்), “திருப்பலி என்னும் திருவழிபாட்டின் மூலம் விணணகமும் மண்ணகமும் இணைகின்றது” எனக் கூறியுள்ளார்.
     திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் ஊற்றும் உச்சியுமாக இருப்பது திருப்பலி. இத்திருப்பலிக் கொண்டாட்டமானது இறைவார்த்தையை உடைக்கும் இறைவார்த்தை வழிபாட்டையும், அப்பத்தை உடைக்கும் நற்கருணை வழிபாட்டையும் இருபெரும் மையக்கூறுகளாகக் கொண்டுள்ளது. இவ்விரு மையக் கூறுகளுமே சம முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் “திருச்சபை நம் ஆண்டவரின் திரு உடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே, விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாகத் திருவழிபாட்டில் இறைவார்த்தையை… அளிக்கத் தவறுவது இல்லை (இ.வெ. 21)” என்று கூறுகின்றது. ஆனால் நமது உணர்விலும் சரி, உள்ளத்திலும் சரி, நாம் இவ்விரு வழிபாடுகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கின்றோமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. பொதுநிலையினர் மட்டுமல்லாது, சில சமயங்களில் இறைபணியாளர்களும் கூட இச்சம முக்கியத்துவத்தை உணர மறப்பதும், மறுப்பதும் வேடிக்கை மட்டுமன்று, வேதனையும் கூட. பல வேளைகளில் இறைபணியாளர்கள் இம்முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த முற்பட்டாலும், பொதுநிலையினராகிய நாம் திருவிவிலியம் இன்றி திருப்பலிக்கு வருவதும், மறையுரை நேரத்தில் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும் இருப்பதும் இத்தகு மனநிலையையே உணர்த்துகிறது என்பது வெள்ளிடைமலை.
     இதுமட்டுமல்ல, இறைவன் நம்மை மன்னிப்பது போல ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ வலியுறுத்தும் மன்னிப்பு வழிபாடு, தன்னையே பிறர்க்காகப் பலியாக்கிய இயேசுவைப் போல துன்புறும் மக்களுக்காகவும் விளிம்பு நிலை மக்களுக்காகவும் ஈகம்(தியாகம்) செய்ய வலியுறுத்தும் நற்கருணை வழிபாடு, இல்லாதவரோடும் இயலாதவரோடும் பகிர்ந்து வாழ வலியுறுத்தும் திருவிருந்துப் பகிர்வு, ஆண்டவருக்கு மட்டுமின்றி அயலாருக்கும் நன்றியுள்ளவர்களாக வாழ வலியுறுத்தும் நன்றிப் புகழ்ச்சி என வழிபாட்டின் அனைத்துக் கூறுகளுமே நமது வாழ்வை நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வகையில் மாற்றிடவே உதவுகின்றன. ஆனால், நமது அன்றாட வாழ்வில் இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது நம்முன் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் வெல்விளியே(சவாலே). அதேவேளையில் இவற்றை உணராமல் வழிபாட்டை வெறும் சடங்காக மட்டுமே பார்த்தால், கார்ல் மார்க்சு கூறியது போல், “மனிதனை மயக்கும் மதுவாக” மட்டுமே மதம் அமைந்து விடும். எனவே, வழிபாட்டில் கற்பதை வாழ்வாக்க முயல்வோம். நமது வாழ்வே வழிபாடாகட்டும். வழிபாடே வாழ்வாகட்டும்.
- சகோ. க. செ. பிரவீன் ராசு,
(தூத்துக்குடி மறைமாவட்ட குருமாணவன்),
கிறித்து குருமாணவர் ஆன்மிகப் பயிற்சி இல்லம்,

கருமாத்தூர், மதுரை.

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)