துறவறம் பிறந்த கதை (The History of Consecrated Life)

துறவறம் பிறந்த கதை
        “இறைவா! உலகமெங்கும் பரவியிருக்கும் உமது திருச்சபை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருப்பணியாளர், துறவியர், பொதுநிலையினர்” என ஒவ்வொரு திருப்பலியிலும் குருவானவர் செபிக்கும்போது கூடியிருக்கும் விசுவாசிகள் குருக்களுக்காக செபிப்பது உண்மை எனினும் கூட, அவர்களில் எத்தனை பேர் துறவியருக்காக செபிக்கின்றனர் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியே. அந்த அளவிற்கு குருக்கள் தான் துறவியர், துறவியர் தான் குருக்கள் என்ற ஒரு கண்ணோட்டமே கத்தோலிக்கர் மத்தியில் பரவலாக உள்ளது. ஆனால், மறைமாவட்ட குருக்களையும் தாண்டி, துறவிகள் என்ற ஒரு பிரிவினர் பல்வேறு துறவற சபைகளிலும், மடங்களிலும் நமது திருஅவைக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மையாக இருக்கின்றது. குருக்கள் அனைவருமே துறவிகள் என்பது ஒரு உலகப்பொது உண்மையாக இருந்தாலும் கூட உண்மையில் நமது திருஅவை மறைமாவட்டக் குருக்களை துறவிகள் என்ற பிரிவில் சேர்ப்பதே இல்லை. அப்படியென்றால் துறவிகள் என்பவர்கள் யார்?
        “உறங்கும் உலகை எழுப்புங்கள்” என்ற முழக்கத்துடன் துறவற ஆண்டைத் தொடங்கி வைத்துள்ள நமது திருத்தந்தையும், அடிப்படையில் இயேசு சபைத் துறவியுமான பிரான்சிஸ் இவ்வாறு கூறுகிறார்: “இருளில் மூழ்கியுள்ள இடங்களுக்கு இயேசுவின் ஒளியை எடுத்துச் செல்லவும், அவரது நம்பிக்கையை தளர்ந்து போயுள்ள இதயங்களுக்குள் பரப்பவும், இறைவனுக்காகவும். ஏழைகளுக்காகவும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் துறவிகள்.
    ஆம், கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்து உருவாக்கிய திருச்சபைக்காகவும் பணியாற்றுவதை மட்டுமே தங்கள் நோக்கமாகக் கொண்டு பணியாற்றுவோர் தான் துறவிகள். திருச்சபையின் பொதுவான திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் என்னும் நிர்வாக அமைப்பைத் தாண்டி, திருத்தந்தையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு துறவற சபைகள் செயல்பட்டு வருகின்றன. குருக்களைப் போல மக்களோடு மக்களாக இணைந்து பணி செய்யாமல் அனைத்தையும் துறந்து, கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து, துறவற மடங்களுக்குள் இருந்து பணி செய்வோர் தான் இத்தகைய துறவிகள்.
    துறவியரில் பலவகை உண்டு. கிறிஸ்துவை அறியாத நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதித்து வரும் இயேசுசபை போன்ற சபைகள், கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளின் மூலம் பல்வேறு இடங்களில் பணிவாழ்வு வாழ்ந்து வரும் சலேசியன் சபை போன்ற சபைகள், நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கொண்டு, செபம், தவம், ஒறுத்தல் போன்றவற்றில் மட்டுமே வாழ்க்கையைச் செலவழிக்கும் கிளரிசியன் சபை போன்ற சபைகள்… இப்படி துறவற சபைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றில் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய சபைகளும் உண்டு. அங்கீகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் வட்டார சபைகளும் உண்டு. ஆண்களுக்கான சபைகளும் உண்டு. பெண்களுக்கான சபைகளும்; உண்டு.
    பெரும்பாலான துறவற சபைகள் பல்வேறு புனிதர்களால் உருவாக்கப்பட்டவை. தூய பத்திநாதர், தூய லொயோலோ இன்னாசியார், தூய பிரான்சிஸ் அசிசியார், அருளாளர் அன்னை தெரசா போன்ற பல்வேறு இறையடியார்கள் இதில் அடங்குவர். முன்னாள் சென்னை-மயிலை பேராயர் சின்னப்பா ஆண்டகையால் உருவாக்கப்பட்ட இறையரசு சபை, அருட்தந்தை.ஜோசப் விக்டர் அவர்களால் உருவாக்கப்பட்ட தெய்வீகக் குணமளிக்கும் இயேசு சபை, நமது முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை.அந்தோணி சேவியர் அவர்களால் உருவாக்கப்பட்ட மரியாயின் மாசற்ற இருதய பரிகார சபை என இன்றும் பல்வேறு துறவற சபைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. திருச்சபையின் பொதுவான நிர்வாக அமைப்பையும் தாண்டி இத்தகைய சபைகள் ஏற்படக் காரணம் என்ன  என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.
    இயேசுவுக்குப்பின்னர் கிறிஸ்தவத்தைப் போதித்த திருத்தூதர்கள் காலத்திற்குப்பின் திருச்சபை பல்வேறு சோதனைகளைச் சந்தித்தது. பல வேதனைகளை அனுபவித்தது. தூய முடியப்பர் முதல் பல்வேறு இறையடியார்கள் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்த நேரிட்டது. அகில உலக் கத்தோலிக்கர்களின் அரசரான திருத்தந்தை சுரங்கக் கல்லறைக்குள் மறைந்து வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எந்தவித குறைவும் ஏற்படவில்லை.
    ஆனால், 4-ஆம் நூற்றாண்டில் உரோமை அரசன் கான்ஸ்டான்டைன் கிறிஸ்தவ மதத்தை அரச மதமாக அங்கீகரித்தப்பின் நிலைமை தலைகீழாக மாறியது. அதுவரை புரட்சியாளர்களின் மதமாக இருந்த கிறிஸ்தவம் ஆட்சியாளர்களின் மதமானது. போராளிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் பொதுமக்களாக மாறினார்கள். பணிவிடை புரிபவர்களாக இருந்த ஆயர்களும், குருக்களும், பணிவிடை பெறுபவர்களாக மாறினர். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ஆயர்களும், குருக்களும் அரசனின் அரன்மனைகளில் மிகுந்த ராஜமரியாதையுடன் நடத்தப்பட்டனர். இதனால் மந்தையின் நலன் மறந்து, சொந்த நலன்களையும், சொந்தங்களின் நலன்களையும் மட்டுமே முன்னிறுத்த ஆரம்பித்தனர். பகட்டும், படோபமும், ஆடம்பரமுமே இவர்களது வாழ்க்கைத் தேவையாயிற்று. இன்னும் சிலரோ தான்தோன்றித்தனமான கருத்துக்களை சீர்திருத்தக் கருத்துக்கள் என சிறுபிள்ளைத் தனமாக அறிவித்துவிட்டு, தங்கள் தலைமையில் சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். கட்டளை செபங்களைக் கூட செபிக்காமல், இறைவனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர். மொத்தத்தில் கடவுளை மறந்த மதமாக, மக்களை மறந்த மதமாக கிறிஸ்தவ மதம் மாற ஆரம்பித்தது.
    இந்தச் சூழலில் தான் தங்களது ஆன்மாவை இழந்துவிடாமல், பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒரு சிலர் அடர்ந்த காடுகளில் செபம், தவம், ஒறுத்தல் ஆகியவற்றுடன் கூடிய புனித வாழ்வு மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதுவே துறவற வாழ்வுக்கு முதன் முதலில் போடப்பட்ட அடித்தளம். இத்தகையோருள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் தூய வனத்து அந்தோணியார் (ளுவ.யுவெழலெ வாந புசநயவ). மக்களிடையே பதுவை அந்தோணியார் பிரபலமாக இருப்பதால் பெரிய அந்தோணியார் என அழைக்கப்படும் இவர், ஆபத்தான வன விலங்குகள் நிறைந்த கானகத்துப் பகுதியில் இறைபராமரிப்பின் துணையை மட்டுமே நம்பி முதலில் துறவற வாழ்வை மேற்கொண்டார். முதன் முதலில் உலகின் பார்வையிலிருந்து தன்னை விடுவித்து திருமுழுக்கு யோவானைப் பின்பற்றி காடுகளிலும், அடர்ந்த பாலைவனங்களிலும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள ஆரம்பித்தவர் தூய எரோணிமூஸ் (ளுவ.துநசழஅந) என்பது உண்மையாக இருந்தாலும் கூட அவரது நோக்கம் துறவற வாழ்வு அல்ல, மாறாக, திருவிவிலியத்தை மொழி பெயர்ப்பதும், விளக்க உரை எழுதுவதும் மட்டும் தான் என்பதால், தூய வனத்து அந்தோணியாரே துறவிகளின் முன்மாதிரிகையாகக் கருதப்படுகிறார். இவரது மாதிரியை பலரும் பின்பற்ற ஆரம்பிக்கவே, முதன் முதலில் திருத்தந்தையின் அங்கீகாரத்துடன் தூய பத்திநாதர் (ளுவ.டீநநெனiஉவ) துறவறத்தாருக்கான கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தார். இவரைப் பின்பற்றி முதலில் உருவான தூய பத்திநாதர் சபை (டீநநெனiஉவiநௌ)யே கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் துறவற சபையாகும்.
    காலப்போக்கில் தூய பத்திநாதரைப் பின்பற்றி பலரும் பல்வேறு துறவற சபைகளைத் தொடங்க ஆரம்பித்தனர். தூய பிரான்சிஸ் அசிசியாரால் தொடங்கப்பட்ட பிரான்சிஸ்கன் சபை, தூய தொன்போஸ்கோவால் தொடங்கப்பட்ட சலேசியன் சபை போன்ற துறவற சபைகளும் பல்வேறு கொள்கைகளை (ஏழைகளுக்குக் கல்வி, இயலாதோருக்கு மருத்துவம், கைவிடப்பட்டோருக்கு ஆறுதல்) முன்னிறுத்தித் தொடங்கப்பட்டன.
    இவற்றுள் முதன் முதலில் உலகளாவிய முறையில் விரிவடைந்ததும், கிறிஸ்துவை அறியாத நமது இந்திய தேசத்திற்கு இயேசுவைக் கொண்டு வந்ததும், தூய லொயோலோ இன்னாசியாரால் தொடங்கப்பட்ட சேசுசபை (ளுழஉநைவல ழக துநளரள). முன்னாள் படைத்தளபதியான இன்னாசியாரின் தலைமையில் இயேசுவின் படைவீரர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்ட இவர்கள், அக்காலத்தில் பரவியிருந்த சீர்திருத்தம் (சுநகழசஅயவழைn) என்னும் தப்பறைக்குப் பதிலாக, சீர்திருத்த எதிர்ப்புக் (ஊழரவெநச - சுநகழசஅயவழைn) கொள்கைகளை வகுத்து மக்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தினர்.
    இவ்வாறு ஆண்களுக்கான துறவற சபைகள் பெருகி வந்த காலத்தில் பெண்களும் இதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். விளைவு பெண்களுக்கான துறவற சபைகளும் பல்வேறு புனிதர்களால் தொடங்கப்பட்டன. இவர்களுள் தூய பத்திநாதர் (ளுவ.டீநநெனiஉவ), தூய சுவாமிநாதர் (ளுவ.னுழஅiniஉ), தூய கிளாரா (ளுவ.ஊடயசந) ஆகியோர் முக்கியப்பங்கு வகித்தனர். லெரேட்டா சபை, இரக்கத்தின் சகோதரிகள் சபை, பிரான்சிஸ்கன் ஏழைகள் சபை, ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை போன்றவை ஒருசில துறவற சபைகளாகும்.
    முதன் முதலில் பெண்துறவிகளை வெளிச்சத்துக் கொண்டுவந்ததில் லீஜே நகரைச் சார்ந்த புனித ஜுலியானாவுக்கு பெரும்பங்கு உண்டு. தூய சீயன்னா கத்தரீனம்மாள், தூய அவிலா தெரசம்மாள், தூய குழந்தை தெரசம்மாள், தூய போர்ச்சுக்கல் எலிசபெத், நமது இந்திய மண்ணில் பணியாற்றிய அருளாளர் அன்னை தெரசா, தூய அல்போன்சம்மாள், அருளாளர் பாடுகளின் மரி போன்ற புனிதையர் அனைவருமே இதுபோன்ற துறவற சபைகளிலிருந்து வந்தவர்களே. இவ்வாறு, துறவற சபைகளும் அதில் சேரும் துறவிகளின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கவே, துறவிகளின் பணிகளும் வாழ்வுமுறைகளும் பல்வேறு விதங்களில் விரிவடையத் தொடங்கின. அதுவரை காடுகளில் தவம் செய்வது மட்டுமே துறவற வாழ்வு என்றிருந்த நிலை மாறி மக்களின் நலனுக்காகவும் இத்தகு சபைகள் மலரத் தொடங்கின. கைவிடப்பட்டோரை கரம் உயர்த்துவது தொடங்கி கடவுளை அறியாதோர்க்கு அவரை அறிவிப்பது வரை பல்வேறு நோக்கங்களுக்காக இத்தகு துறவற சபைகள் நிறுவப்பட்டு செயல்பட ஆரம்பித்தன.
    திருத்தந்தையின் தலைமையை ஏற்று, அவரது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இச்சபைகளில் ஒரு சில சபைகள். அந்தந்த தல ஆயரின் அனுமதி பெற்று ஒரு சில பங்குகளை அவரது தலைமையின் கீழ் நிர்வகித்து வருகின்றன. இன்னும் சில சபைகள் பங்குகளில் மறைமாவட்டக் குருக்களோடு இணைந்து கல்விப்பணி உள்ளிட்ட பல பணிகளை ஆற்றி வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான பெண் துறவற சபைகள் பள்ளி, கல்லூரிகளை நடத்துவதிலும், மருத்துவமனைகளை ஆரம்பித்து மருத்துவப் பணி புரிவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.

    கற்பு, ஏற்மை, கீழ்ப்படிதல் இம்மூன்றையும் வாழ்வியல் நெறியாக ஏற்று, திருஅவையில் செயல்படும் இத்தகு சபைகள் தொடர்ந்து வளரவும் இவர்களால் பல்வேறு பணிகள் தொய்வின்றி நடைபெறவும் செபிப்போம்.

Comments

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)