History of Our Parish Church

   தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து வடக்கே 4கி.மீ தொலைவில் அடைக்கலாபுரம் என்னும் கிராமம் உள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள “விழிதிறந்து நல்வழிகாட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம்” தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஓர் கிறிஸ்தவ ஆலயம். மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான பழம்பெருமை கொண்ட இவ்வூர் “அற்புதநகர்” என்றும் வழங்கப்படுகின்றது.

ஊரின் வரலாறு:
    சுமார் 1700-களில் பனைமரங்கள் அடர்த்தியாக இருந்த இவ்வூரில் ஏறத்தாழ 20 குடும்பங்கள் பனைத்தொழில் செய்து வந்தனர். அக்காலத்தில் பல ஊர்களில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, வடக்கன்குளம், பொத்தக்காலன்விளை, காயாமொழி, ஏரல், உடன்குடி போன்ற ஊர்களிலிருந்து பல குடும்பங்கள் இவ்வூரில் அடைக்கலம் புகத் தொடங்கினர். இவ்வாறு அண்டி வந்தோர்க்கு ஆதரவு அளித்ததால் “அடைக்கலாபுரம்” என்னும் பெயர் வழங்கலாயிற்று.
    இந்நிலையில், ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப்பின் 1854ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் அருகிலுள்ள ஆலந்தலை என்னும் கடற்கரை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகம் ஒன்று அங்குள்ள சூழ்நிலை குழந்தைகளுக்கு ஒத்து வராததால், அடைக்கலாபுரம் மக்களின் உடல் உழைப்பு மற்றும் உதவியோடு 1856-ல் இவ்வூருக்கு மாற்றப்பட்டது. இயேசு சபை குருக்களான அருட்தந்தை.ஜாண் போசன், அருட்தந்தை.வெர்டியர் ஆகியோரால் தொடங்கப்பட்ட இவ்வன்பு நிலையம், நாளடைவில் கருவறை முதல் கல்லறை வரை அனைத்து நிலையிலுள்ள ஆதரவற்றோரையும் காக்கும் இல்லமாக “தூய சூசை அறநிலையம்” என்னும் பெயர் பெற்று விளங்கியது.
    இக்காலக் கட்டத்தில், தூய அடைக்கல அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு முதலில்; ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தூய பெக்கட் தோமையார் பெயரால் உருவான ஆலயமே இவ்வூரின் ஆலயமாக இருந்தது. ஆறுமுகனேரி உள்ளிட்ட எட்டு சுற்று வட்டார ஊர்களை உள்ளடக்கிய பங்காக இவ்வூர் விளங்கியது. பின்னர் 1930ல் அருட்தந்தை.ஜோசப் ரோச் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு குடிசைக் கோவிலாக உருவாக்கப்பட்டது தூய அடைக்கல அன்னை ஆலயம். நாளடைவில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, அடைக்கலாபுரம் பங்கு நிர்வாகத்திலிருந்து தூய சூசை அறநிலையம் தனியாகப் பிரிக்கப்பட்டு, 1952 முதல் அடைக்கலாபுரத்திற்கென தனி பங்குக் குருவாக அருட்தந்தை. பால்பாஸ்டியான் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில், ஊரில் கொடிய காலரா நோய் ஏற்பட்டு, பல உயிர்களை பலிவாங்கியது. தந்தையவர்களின் பெருமுயற்சியால், பரிகாரப் பவனிகள் போன்றவை நடத்தப்பட்டதால் காலரா நீங்கியது. அன்றிலிருந்து இன்று வரை எந்த கொள்ளை நோயும் இவ்வூரில் ஏற்பட்டதில்லை.
    1965ல் ஆலயம் புதிதாகக் கட்டி எழுப்பத் திட்டமிடப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை.அந்தோணி சேவியர் அவர்களால், தற்போதைய வடிவில் அஸ்திவாரமிடப்பட்டது. ஏறத்தாழ 40 ஆண்டுகள் மக்களின் கடின உழைப்பாலும், நன்கொடையாலும் கட்டி எழுப்பப்பட்ட இவ்வாலயம் அருட்தந்தை.சி.சேவியர் அவர்களின் காலத்தில் 1980ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் நாள் முன்னாள் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு.அம்புரோஸ் மதலைமுத்து அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

இடிதாங்கிய அதிசயம்:
    1976ஆம் ஆண்டு வானம் பொய்த்து மழையின்றி மக்கள் துன்பப்பட்டதால், அக்டோபர் 6ஆம் நாள் திருவிழாவின் போது மழைக்காக மக்கள் மனதுருகி செபித்தனர். சப்பரப்பவனி முடிந்ததும், திடீரென்று வானம் திறந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஆயிரக்கனக்கான மக்கள் கூடியிருந்த ஆலய வளாகத்தில் பயங்கர இடி ஒன்று விழுந்தது. மக்கள் திரளுக்கு நடுவே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட மரச்சிலுவை மீது இடி தாக்கவே, சிதறிய சிலுவையின் துண்டுகள் 6கி.மீ தொலைவில் இருந்த ஆறுமுகனேரி வரை விழுந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அதிசயமாக, கூடியிருந்த மக்களில் ஒருவருக்கும் சிறிய காயம் கூட ஏற்படவில்லை. இப்புதுமையின் நினைவாகவே, ஆலயத்தின் முகப்பில் பிரம்மாண்ட சிலுவைக்; கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்திறந்து காட்சி தந்த புதுமை:
    2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் முற்பகல் 11.00 மணியளவில் ஆலயத்தில் செப வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, அற்புதமான முறையில் திடீரென அன்னையின் திருச்சுரூபம் கண்களைத் திறந்து மூடியது. ஏறத்தாழ ஒரு வார காலம் தொடர்ந்து நடந்த இப்புதுமையைக் காண இந்தியா முழுவதிலுமிருந்து திருப்பயணமாக வந்த பல மக்கள் சாட்சி கூறினர்.

தொடரும் புதுமைகள்:
Ø   ஆலய வேலை நடந்து கொண்டிருந்த போது, கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர் ஒருவர் 25 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்து சிறிய காயம் கூட இன்றி உயிர்பிழைத்தார்.
Ø   ஆலயத்தில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென கீழே செங்குத்தாக விழுந்த போது, அமர்ந்திருந்தவருக்கு எத்தீங்கும் ஏற்படவில்லை.
Ø   மருத்துவர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ பேர் ஆலயத்திற்கு வந்து அன்னையின் அருளால் அதிசயமாக குணமாகிச் சென்றுள்ளனர்.
Ø   திருமன வரத்திற்காகவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் வேண்டிய பலர்  அன்னையின் அருளால் அதிசயங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

திருத்தலத் திருநிகழ்வுகள்:
எ  ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெறுகின்றது.
எ  சனிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் திருப்பலி நடைபெறுகின்றது.
எ  ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.00 மணிக்கு திருப்பலி நடைபெறுகின்றது.


திருத்தல சிறப்புத் திருநிகழ்வுகள்:
·       ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு திருச்செபமாலை, குணமளிக்கும் நற்செய்திப் பெருவிழா, நவநாள் திருப்பலி மற்றும் புதுமை அசன விருந்து ஆகியவை நடைபெறுகின்றன.
·       ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் ஞாயிறு காலை 4.00 மணி வரை முழு இரவு திருச்செபமாலை வழிபாடு நடைபெறுகின்றது. ஞாயிறு காலை 4.00 மணி சிறப்புத் திருப்பலியடன் இவ்வழிபாடு நிறைவு பெறும்.
·       ஒவ்வொரு ஆண்டும் இத்திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா செப்டம்பர் 28ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 7ஆம் நாள் நிறைவு பெறுகின்றது.
    இத்திரு நிகழ்வுகளில் தென் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரளாக பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.

திருத்தலம் செல்லும் வழி:
    தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
    இன்றும் பல்வேறு புதுமைகளால் நாடி வரும் மக்கள் அனைவரின் துயர் போக்கி, அவர்கள் வாழ்வில் வசந்தத்தைத் தரும் இல்லமாக விளங்கி வருகின்றது, விழிதிறந்து நல்வழிகாட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம்.

மேலும் விபரங்களை அறிய:
§  திருத்தலத்திலிருந்து வெளிவரும் “அடைக்கல விழியொளி” என்னும் மாத இதழின் மூலம் திருத்தலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
§  திருத்தலத்தின் வலைத்தளமான “றறற.யனயமையடயஅயவாய.உழஅ” என்ற முகவரியிலும் திருத்தலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தொடர்புக்கு:

பங்குத்தந்தை,
அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம்,
“அற்புதநகர்” அடைக்கலாபுரம்,
திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் - 628 217.

Phழநெ : 04639 - 245782
ந-அயடை : iகெழ;யனயமையடயஅயவாய.உழஅ

             யனயமையடயஎiணாலைழடi;பஅயடை.உழஅ

Comments

Post a Comment

Popular posts from this blog

திருச்சிலுவைப் பாதை

Important Bible Verses

இளமை - இது சாதிக்கும் பருவம் (Youthhood - The age for Acheivements)