செய்யும் தொழில் தெய்வம் அல்ல (Work is not Worship)
செய்யும் தொழில் தெய்வம் அல்ல
“செய்யும் தொழிலே தெய்வம்“ - மாலை மயங்கும் வேளையில் திருச்செந்தூரில் ஒரு கடையின் முகப்பில் எழுதப்பட்டிருந்த இவ்வாசகத்தைக் கண்டதும் எனக்குள் ஓராயிரம் சந்தேகங்கள். அன்றாடம் ஏதேனும் ஒரு வகையில் கேட்டுக் கேட்டுப் பழகிப்போன வாசகம் தான் என்றாலும் அன்று மட்டும் ஏனோ இவ்வாசகம் புதிதாகத் தோன்றியது. தொழில் எப்படி தெய்வமாக முடியும்? எனக்குள் எழுந்த இக்கேள்விக்கு விடையளிக்க நீங்களாவது தயாரா?
“செய்யும் தொழிலே தெய்வம்“ என்னும் பழமொழியைக் கண்டுபிடித்து இவ்வுலகிற்குத் தந்தவர் சுவாமி விவேகானந்தர் என்றே நாம் பல வேளைகளில் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஆதிக்க வெறி அதிகம் கொண்ட பார்ப்பனீய சமூகமே இவ்வெட்டிப் பழமொழியின் உற்பத்தியாளர் என்பது புதிய, ஆனால் உண்மையான செய்தி. ஒருவேளை விவேகானந்தர் கூட பிராமணர்களின் பிரதிநிதியாகவே பெரும்பாலும் அடையாளம் காட்டப்படுவதால் இது அவரது மொழியாக வழங்கப்படுகிறதோ என்னும் ஐயப்பாடு எழுவதையும் மறுப்பதற்கில்லை. சரி, விஷயத்திற்கு வருவோம்.
கைபர்-போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து ஆடு மேய்ப்பவர்களாகத் தங்களை அறிமுகம் செய்து கொண்டவர்கள் தான் இந்த ஆரியர்கள். பிழைப்புத் தேடி வந்த அகதிகளாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு நம் நாட்டில் நிலவி வந்த ஏற்றத்தாழ்வுகள் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகத் தோன்றிது. பின்பு “கடவுளின் பிரதிநிதிகள்“ என்று தங்களுக்குப் புதுப்பெயர் சூட்டிக் கொண்ட இவர்கள் நம் நாட்டில் இரு மிகப்பெரும் சீர்கேடுகளுக்குக் காரண கர்த்தாவானார்கள். அவை பற்றி சற்று விளக்கமாகக் காண்போம்.
மனுதர்மம் என்னும் மாயை:
தொழிலின் அடிப்படையில் மக்களைக் கூறுபோட ஆரியர்கள் கண்டுபிடித்த ஒரு புதிய அடிமைச் சாசனமே இந்த மனுதர்மம். வேதம் ஓதும் பிராமணர், ஆட்சி செய்யும் சத்திரியர், வாணிகமபுரியும் வைசியர் இம்மூன்று பிரிவினருக்கும் ஏவல் வேலை செய்யும் சூத்திரர் என மக்களைப் பிரித்தாண்டு, சாதி, தீண்டாமை போன்ற அடிமைத் தளைகளை அவிழ்த்து விட்டனர். அப்போதும் கூட கடவுளின் தோளில் பிறந்த சத்திரியர், வயிற்றில் பிறந்த வைசியர், காலில் பிறந்த சூத்திரர் ஆகிய அனைவரையும் விட தலையில் பிறந்த தாங்களே தலைசிறந்தவர்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டனர். ஒருவேளை அவர்கள் காலம் காலமாக தங்கள் தலைமுறையினர் வேதம் ஓதுபவர்களாக, அனைவரையும் விட உயர்ந்தவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநல சித்தாந்தத்தின் அடிப்படையில் செய்யும் தொழிலைத் தெய்வம் எனப் பறைசாற்றியிருக்கலாம். அதற்காக அடிமை வேலை செய்யும் மக்களுக்கு அடிமைத்தொழில் தெய்வம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
இந்துத்வா என்னும் இழிவு நிலை:
ஆரியர்களால் புகுத்தப்பட்ட மற்றொரு போலிக் கொள்கையே இந்துத்வா. பெற்றோர்களையும், இயற்கையையும் மட்டுமே தெய்வமாக வணங்கி வந்த இந்திய நாட்டில் (மேலை நாடுகளில் கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இதற்கு முன்னரே இருந்தன) மக்கள் செய்த தொழில்களையும். அவர்களது வாழிடங்களையும் கொண்டு ஆறு மதங்களை உருவாக்கினர் இந்த ஆரியர்கள்.
குறிஞ்சி - கார்த்திகேயம் - கார்த்திகேயன்(முருகன்)
முல்லை - சைவம்(சிவம்) - சிவன்
மருதம் - காணபத்யம் - கணபதி
நெய்தல் - வைணவம் - திருமால்
பாலை - கௌமாரம் - கொற்றவை(காளி)
- சௌரம் - சூரியக்கடவுள்
ஒரு கட்டத்தில் இந்த ஆறு மதங்களுக்குள்ளும் போட்டிகளும், சண்டைகளும் எற்படத் தொடங்கின. எந்த மதம் பெரிய மதம்? என்ற வாதம் அவர்களுக்குள் ஏற்படவே. பயந்து போன ஆரியர்கள் தங்கள் குள்ளநரித்தனத்தைப் பயன்படுத்தி, இந்த ஆறு மதக் கடவுள்களுக்கும் உறவை ஏற்படுத்தினர். ஆறு பேருமே ஒரு குடும்பத்தினர் என்றும், அவர்கள் அனைவருமே தெய்வங்கள் என்றும் பிதற்றத் தொடங்கினர். இந்தப் பிதற்றலின் அடிப்படையில் உருவானது தான் இந்துத்வா என்று வழங்கப்படும் இந்துமதம்.
இவ்வாறு தொழில்களின் அடிப்படையில் கடவுள்களையும், மதங்களையும் ஏற்படுத்தி, தொழிலைத் தெய்வமாக்கிய பெருமை இந்தப் பார்ப்பனர்களையே சாரும்.
இப்படியாக, தொழில்களைத் தெய்வமாக்கி அதன் மூலம் ஏழைகளை என்றும் ஏழைகளாகவே இருக்கச் செய்ய ஆரியர்கள் கைக்கொண்ட சூழ்ச்சியே பின்னாளில் இராஜாஜியின் மூலம் குலக்கல்வித்திட்டம் என்னும் வடிவத்தைப் பெற்றது. ஆம், அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த இராஜாஜி என்ற இராஜகோபால ஆச்சாரியார் ஒரு புதுவித கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவனும், பாதிநேரம் ஏட்டுக் கல்வியையும், மீதி நேரம் பெற்றோரோடு இணைந்து அவர்களது குலத்தொழிலை அதாவது குடும்பத் தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இச்சட்டத்தின் சாராம்சம்.
இச்சட்டத்திற்கு எதிர்ப்புகள் வலுக்கவே, இராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இச்சட்டமும் கூட செய்யும் தொழிலே தெய்வம் என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானது தான் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே புரியும். சரி, இப்போது நமது கேள்வி... ஒரு வேளை செய்யும் தொழில் தெய்வமென்றால் ராஜாஜியின் சட்டம் நல்லது தானே? குலக்கல்வித்திட்டம் பின்பற்றப்பட வேண்டியத தானே? பனையேறியின் மகன் கடைசி வரை பனையேறியாகவும், சாக்கடைகளை சுத்தம் செய்பவனின் மகன் கடைசி வரை சுத்தம் செய்பவனாகவும், ஏழையின் மகன் ஏழையாகவும், பணக்காரனின் மகன் பணக்காரனாகவும் இருக்க வேண்டியது தானே? ஏன் இச்சட்டத்தை எதிர்த்தோம்? யோசித்துப் பார்த்தால் ஒரே பதில்தான் திரும்பத்திரும்ப வரும். செய்யும் தொழில் தெய்வம் அல்ல.
எனவே, நண்பர்களே, இனியாவது இது போன்ற வெட்டிப் பழமொழிகளை புறந்தள்ளுவோம். நம்மை விட நம் மக்கள் மேல்நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கைக்கொள்வோம். “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்“ என்ற வள்ளுவனின் வாய்மொழிக் கேற்ப நம் இலட்சியப் பறவைகள் சிறகுகள் விரித்து விண்ணைத் தொடட்டும்.
Comments
Post a Comment