அம்மா என்றால் அன்பு (Mother means Love)
அம்மா என்றால் அன்பு பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம் இவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா? விலைமீது விலைவைத்து கேட்டாலும் கொடுத்தாலும் கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா ஈரைந்து மாதங்கள் கருவாக எனைத்தாங்க நீீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா? இப்பாடல் வரிகளைக் கேட்காதவர்களோ, கேட்டு ரசிக்காதவர்களோ யாரும் இருக்க முடியாது. அப்படி யாரேனும் இருந்தால் கூட இப்பாடல் வரிகள் உணர்த்தும் மிகப்பெரும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. ஆம், தாய் என்னும் மாபெரும் உறவு இத்தரணியில் உருவெடுக்கும் உயிர்கள் அனைத்திற்குமே உண்டு. எத்தனை உறவுகள் எத்தனை வடிவங்களில் ஒருவனுக்கு வாய்த்தாலும் கூட, அனைத்திற்கும் அச்சாரமாக அமைவதும், அனைத்திலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைவது ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்கும் இடையில் அமைந்த உறவே. ஏனெனில், எத்தனை உறவுகள் இருப்பினும் அத்தனை உறவுகளையும் அறிமுகப்படுத்துவதும், அடையாளப்படுத்துவதும் அந்தத் தாய் உறவாகத் தான் இருக்கும். எனவே தான், ஒரு குழந்தையின் முதல் உறவாக, முழுமையான உறவாக, முதன்மையா